கொரோனான்னு ஒண்ணு வந்ததில இருந்து எல்லார் வீட்டிலயும் என்னென்ன மாற்றங்கள் வந்திருக்குனு எனக்குத் தெரியல.. ஆனா எங்க வீட்டில நல்ல மாற்றாத்த என்னால உணர முடியுது..
எப்போதும் வேல,வேலனு அலையுற என்னோட வீட்டுக்காரர் இப்பெல்லாம் எப்போதும் சாப்பாடு, சாப்பாடுனுதான் அலையுறாரு. ஒரு வார்த்தையாவது பேச மாட்டாரானு முன்னாடிலாம் தோணும், ஆனால் இந்தக் கொரோனா காலத்துல ஏண்டா இப்படி பேசியே கொல்றார்னு தோணுற அளவுக்குப் பேசியே கொல்லுறாரு..
எப்படா வேலைய முடிச்சுட்டு வீட்டுக்கு வருவாருனு ஏங்குன காலம்போய், ‘எங்கேயும் வெளில போய்த் தொலைய மாட்டேங்குறாரே! வீட்டுக்குள்ளே இருந்துக்கிட்டு அதச் செய், இதச் செய்னு எப்பப் பார்த்தாலும் நம்மள வேலமேல வேல வாங்கிட்டே இருக்காரே’னு நெனைக்க வச்சிடுச்சி இந்தக் கொரோனா காலம்.
முன்னெல்லாம் “ஏங்க இன்னைக்கு ஒருநாளாவது லீவ் போடுங்களேன் ப்ளீஸ்” அப்படினு கெஞ்சிக்கிட்டு இருப்பேன். ஆனா இப்பெல்லாம் “ஏங்க இன்னிக்கு ஒருநாளாவது ஆபீஸ் போய்ட்டு வாங்களேன், எனக்கு கொஞ்சம் வேலை இல்லாம ஃப்ரீயா இருக்கும்.கொஞ்ச நேரமாவது ஜாலியா எனக்குப் பிடிச்ச டி.வி ப்ரோகிராம் எதாவது பார்த்துக்கிட்டு, நல்லா நிம்மதியாத் தூங்கி எந்திச்சுப்பேன்.”அப்படினு சொல்ற அளவுக்கு வந்துட்டேன்.
“ஏங்க என்கூட டைம் ஸ்பெண்ட் பண்ண மாட்டேங்குறீங்க? ” அப்படினு ஏங்குன காலம் போய்,”ஏங்க எப்பப் பார்த்தாலும் வீட்டுக்குள்ளே கெடந்துக்கிட்டுத் தொணதொணன்னு ஏதாவது சொல்லி என் உயிர வாங்குறீங்க? வெளில வேற எதாவது வேல இருந்தாப் போய் பாருங்க”அப்படினு சொல்ற அளவுக்கு நம்மள மாத்திடுச்சு இந்தக் கொரோனா காலம்.
பிள்ளையப் பள்ளிக்கூடத்துல போய் விட்டுட்டுப் பிரிய மனமில்லாமல் அரைமனதோட பள்ளிக்கூடத்து வாசல்ல நின்னு பார்த்துகிட்டே வீட்டுக்குத் திரும்பி வந்துட்டு “ஐயோ! புள்ள அங்க என்ன பண்ணிட்டு இருப்பானோ? மதியம் சாப்பாடு ஃபுல்லா சாப்பிட்டானானு தெரியலயே?”னு யோசிச்சிக்கிட்டே இருந்துட்டு, அதுக்கப்புறம் சாயங்காலம் ஆனதும் “எப்படா பள்ளிக்கூடத்துல இருந்து வருவானோ‘னு ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்த காலம் போய், “எப்படா பள்ளிக்கூடம் தொறப்பாங்க?, இவன வீட்டுல வச்சி சமாளிக்க முடியலயே?!”னு நெனைக்க வச்சிடுச்சி இந்தக் கொரோனா காலம்.!
பள்ளிக்கூடத்துல போய்ப் புள்ளைங்க படிச்ச காலம்போய், ஆன்லைன் க்ளாஸ்ல புள்ளைங்களுக்குப் பதிலா அம்மாங்க, பாட்டிங்க எல்லாம் உக்காந்து பாடத்தப் படிக்குறமாதிரி மாத்திடுச்சு இந்தக் கொரோனா.!
சாயங்காலம் பள்ளிக்கூடத்துல இருந்து களைச்சிப் போயி வரும் பிள்ளைக்கு காபி, ஸ்நேக்ஸ் எல்லாம் குடுத்து, பக்கத்துலே இருந்து ரசிச்ச காலம் போய், ”ஏண்டா எப்ப பார்த்தாலும் ஸ்நேக்ஸ், ஸ்நேக்ஸ்னு என் உயிர வாங்குற.? சீக்கிரம் பள்ளிக்கூடத்தத் தொறந்து தொலைய மாட்டேங்குறாங்களே! உன்னோட தொல்ல தாங்க முடியலயே”னு திட்டுற அளவுக்கு இந்த கொரோனா காலம் மாத்திடுச்சி.!
ஆனா ஒண்ணு கொரோனா டைம்ல எல்லாரும் வேலைப்பளு இல்லாம ஃப்ரீயா இருக்குறாங்கனு தான் சொல்றாங்க, ஆனால் எனக்குத் தெரிஞ்சிக் குடும்பத் தலைவிகளுக்கு என்னவோ இந்தக் கொரோனா காலத்துல இன்னும் வேலைப்பளு அதிகமாத்தான் ஆயிருக்குனு தோணுது.😌உங்க வீட்டிலயும் இந்தக் கொரோனா காலம் இந்த மாதிரிப் பல தாக்கத்தை ஏற்படுத்தி இருக்குமென்றே நான் நினைக்கிறேன்..!