பெண்களை அதிகம் ஆட்டுவிக்கும் உணர்வுப் பிரச்னை, மூட் ஸ்விங் எனப்படும் மாறும் மனநிலை. பெண்களின் இந்த மனநிலையால், உண்மையில் மற்றவர்களைவிட அவர்களே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
ஆண்களைவிட பெண்களிடத்தில், ஹார்மோன் செயல்பாடு இரு மடங்கு தீவிரமாக இருக்கும். எப்போதும் மாற்றங்கள் அடைந்து கொண்டிருக்கும் உடலின் சொந்தக்காரர்களான அவர்களை புரிந்துகொள்வது, ஆண்களுக்கு பல சந்தர்ப்பங்களில் கடினமாகவே இருக்கும். திடீரென மனநிலை மாறும்போது அவர்கள் மோசமாக அல்லது அசாதாரணமாக நடந்துகொள்கிறார்கள் எனில், அவர்கள் வேண்டுமென்றோ அல்லது தனது மனதுக்கு இனியவரிடம் அப்படியிருக்க வேண்டுமென்றோ விரும்பிச் செய்வதில்லை. எந்தப் பெண்ணும் அதை விரும்பமாட்டார். மூட் அவுட் ஆகி எரிச்சலில் கத்தும்போது அல்லது மன ஊசலாட்டத்தில் ஆழ்ந்திருக்கும் போது, அவர் எவ்வளவு கஷ்டபடுகிறார் என்பதை நீங்கள் உணர முடியும்.
இதற்கு காரணம் வெளிப்புறக் காரணிகளாகவோ அல்லது சொந்தப் பிரச்னைகளாகவோ இருக்கலாம். ஆனால், மாதவிடாய் நாட்களுக்கு முன்பு உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் (pre menstrual syndrome-PMS) தான் பெண்களின் மூட் ஸ்விங் எனப்படும் மாறும் மனநிலைக்கு முதன்மை காரணியாக இருக்கிறது.
உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாது என்பதை உணருங்கள்
எல்லாவற்றுக்கும் முன்பாக, உங்கள் மனைவியின் (அ) காதலியின் உணர்வுகள், ஏன் வேறு யாருடைய உணர்வுகளின் மீதும் உங்களுக்கு கட்டுப்பாடு இல்லை என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டியது முக்கியம்.
பொறுமைதான் தேவை
மாறும் மனநிலையால் பாதிக்கப்பட்டுள்ள உங்கள் மனைவி (அ) காதலியிடம் பொறுமை காட்டுங்கள். சில நேரங்களில் இந்த மன ஊசலாட்டத்தால் அவர்கள் மோசமாக நடந்துகொள்லலாம். ஆனால், அது அவர்களின் உண்மையான வெளிப்பாடல்ல. உங்கள் அன்புக்குரியவர், தனது விரக்தியையே இப்படி வெளிப்படுத்துகிறார்.
ஃப்ரீயா விடுங்க
ஏன் அப்படி நடந்துகொள்கிறார் என்று அவரை கேட்டுக் கொண்டே இருக்காதீர். சில நேரங்களில் உங்களின் இடையூறு அவரின் நிலையை மேலும் மோசமாக்கலாம். இதைத் தவிர்க்க, அவர் தானாகவே மீண்டுவர நீங்கள் அவகாசம் அளிக்க வேண்டும்.
நிதானமாக கவனியுங்கள்
மனைவி உங்களிடம் பேசும்போது, அவரது மூடை பாதிக்கும் விஷயம் எதுவாக இருக்கும் என்று கண்டறிய முயலுங்கள்.
நீங்களாகவே முடிவுக்கு வரவேண்டாம்
அவர் செய்த தவறுகளை கண்டுகொள்ளாமல் விடுங்கள். இதுவே அவரை பாதி சரி செய்துவிடும். தேவையற்ற விவாதங்களை செய்யாமல், அமைதியாக இருங்கள். இது அவரை விரைவாக மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பக் கொண்டு வரும்.
அவராக இருக்க விடுங்கள்
மாறும் மனநிலையால் தொந்தரவுக்கு உள்ளாகி இருப்பவரை, மேலும் தொந்தரவு செய்யாமல் அவர் போக்கில் விடுங்கள். இது அவர் தன்னை வெளிப்படுத்தவும், அவர் மீண்டு வரவும் உதவும். பெண்களுக்கு ஏற்படும் இந்த மாறும் மனநிலை, கையாள்வதற்கு கடினமானது. பெரும்பாலான சமையங்களில், அடக்கி வைக்கப்பட்டிருகும் உணர்வுகள் வெளிவரப் போகும் ஒரு வழியாக அது இருக்கும். தன்னை விடுவித்துக்கொள்ள முனையும் பெண்ணுக்கு தொந்தரவு கொடுப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். ஆகவே கண்டுகொள்ளாமல் விடுங்கள்.
தட்டிக் கொடுங்கள்
மாறும் மனநிலையால், அவர் எரிச்சலடைந்தும் கடுப்பிலும் இருப்பார். அப்போது நீங்கள் செய்யக்கூடிய சிறந்த செயலாக, அவருக்கு பாடி மசாஜ் செய்யலாம், அவருக்கு பிடித்தச் சுவையான உணவுகளை அளிக்கலாம், ஒரு வெந்நீர் குளியல் போடச் சொல்லலாம், இப்படி அவர் ரிலாக்ஸ் செய்ய உதவலாம்.
உங்கள் துணைவரை கட்டி அணையுங்கள். இதைச் செய்வதற்கு முன்பாக அவரின் மூட் எப்படி இருக்கிறது என்பதை கவனியுங்கள். சில நேரஙளில் அணைப்புக்கு எப்படி வினையாற்றுவார்கள் என்பதை நம்மால் கணிக்க முடியாது. எல்லாம் சரியாக இருந்தால், அவரை கொஞ்ச நேரம் உங்கள் கைகளில் ஏந்தி, அவருக்கு நீங்கள் எப்போதும் ஆதரவாக இருக்கிறீர்கள் என்பதை உணரச் செய்யுங்கள். கடினமான சூழலைக் கடக்க அவருக்கு இது உதவும். அணைப்பும், காதல் விளையாட்டுகளும், அவரை ஆசுவாசப்படுத்தலாம்.
அடிக்கடி பாராட்டுங்கள்
அவர் மோசமான மனநிலையில் இருக்கும் போது, அவ்வப்போது அவரை பாராட்டுவதன் மூலமும், அவரை காதலிப்பதில் நீங்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக உணர்கிறீர்கள் என்பதை உணர்த்தும் போதும், அவரை மகிழ்ச்சியாகவும், நன்றாகவும் உணரச் செய்ய முடியும். அவர் சிரிக்கும் போது எவ்வளவு அழகாக இருக்கிறார், அவரது அழகிய கன்னங்கள், புதிய ஆடையில் எப்படி ஜொலிக்கிறார், …இப்படி அவர் உங்கள் வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறார் என்பதை அவ்வப்போது உணர்த்துங்கள். இதை இயல்பாகவும், அமைதியாகவும் செய்யுங்கள்.
கவனத்தை திசைத் திருப்புங்கள்
உங்களின் துணைவர் சவுகரியமாக உணர, அவரை பிசியாக வைத்திருக்கும் உத்திகளும் உதவும். ஒன்றாக சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது, ஒன்றாக உடற்பயிற்சிகள் செய்வது அல்லது வீட்டில் உட்கார்ந்து விளையாடுவது என அவரது கவனத்தை மாற்ற எதையாவது செய்யுங்கள்.
வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பதைவிட, வெளியே செல்வது நல்லது. அவரது மூட் ஸ்விங், அவரை மோசமாக நடந்தகொள்ள செய்தாலும், வெளியே ஒரு பயணமோ, நண்பர்களுடன் சந்திப்போ, சுற்றிப்பார்க்க செல்வதோ, அல்லது ஒரு டின்னரோ, பூங்காவுக்கு அழைத்துச் செல்வதோ அவரை அமைதிப்படுத்திவிடும். நல்ல காற்றும், மனிதர்களுடன் உறவாடுவதும், அவரது நரம்புகளை அமைதிப்படுத்தும்.