அதிமுகவின் வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும் என ஓபிஎஸ் ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இதையடுத்து, கடந்த 11ம் தேதி நடந்த அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில், தற்காலிக இடைப்பொதுச்செயலாளராக இபிஎஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின், ஓபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்களை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பதவியில் இருந்தும் நீக்கினார். அதன்பின்னர்,.
அதிமுகவின் பொருளாராக திண்டுக்கல் சீனிவாசன் தேர்வு செய்யப்படுவதாக அறிவித்தார்.
பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற சமயத்தில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் அதிமுக அலுவலகத்தின் கதவுகள் உடைக்கப்பட்ட நிலையில், வருவாய் துறையினர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். இது தொடர்பான வழக்கில் தலைமை அலுவலகத்தின் சாவியை இபிஎஸ்-யிடம் தரவேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதற்கிடையே கடந்த 12ம் தேதி அதிமுகவின் வங்கி கணக்கு, வழக்குகளை திண்டுக்கல் சீனிவாசன் பார்ப்பார் என வங்கி மேலாளர்களுக்கு இபிஎஸ் கடிதம் அனுப்பினார். அதே நேரம் அதை ஏற்கக்கூடாது என ஓபிஎஸ்-ம் கடிதம் அனுப்பினார். இதில் இபிஎஸ் கடிதத்தை வங்கிகள் ஏற்றுக்கொண்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநருக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “அதிமுகவின் 7 வங்கிக் கணக்குகளை முடக்க வேண்டும்.அதிமுக தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன. தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வரை தான் தான் அதிமுக பொருளாளர். பொதுக்குழு குறித்து தேர்தல் ஆணையம் முடிவு எடுக்கும் வரை கரூர் வைஸ்யா, எஸ்பிஐ,இந்தியன் வங்கி உள்ளிட்ட 7 கணக்குகளில் பணப்பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.