தமிழ்வழி கல்வி்க்கான 20 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
20 சதவீத இடஒதுக்கீடு
தமிழ்நாட்டில் தமிழ்வழியில் படித்தவர்களுக்கான 20% இட ஒதுக்கீடு, பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை அனைத்து நிலைகளிலும் தமிழ்வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் வகையில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு தமிழக ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. இது சமூகநீதிக்கு எதிரானது.
இதுதொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற கிளையில் நேற்று விசாரணைக்கு வந்த போது தான் இது தொடர்பான சட்டத்திற்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்ற உண்மை தெரியவந்துள்ளது. ஆளுநரின் தாமதம் மிகவும் வேதனையளிக்கிறது.
தாமதம் தேவையற்றது
ஆளுநர் இந்த அளவுக்கு காலதாமதம் செய்வது தேவையற்றது. தமிழ்வழியில் படித்தவர்களுக்காக இட ஒதுக்கீடு என்பது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை தானே தவிர, யாருடைய உரிமையையும் பறிக்கும் செயல் அல்ல. அத்தகைய சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர் தயங்குவது ஏன்? தமிழ்வழியில் பயில்வோரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து விட்ட நிலையில், தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிப்பதற்காக தமிழில் படிப்பவர்களுக்கான இடஒதுக்கீட்டை 50 விழுக்காடாக உயர்த்தினால் கூட தவறில்லை.
ஒப்புதல்
எனவே, இனியும் தாமதிக்காமல் தமிழ்வழிக் கல்வி 20% இட ஒதுக்கீட்டுச் சட்டத்திருத்தத்திற்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும். ஆளுநர் அதை செய்ய மறுத்தால், தமிழக அரசே நேரடி அரசாணை பிறப்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.