தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற கடுமையாக உழைக்க வேண்டுமென நிர்வாகிகளுக்கு ராகுல் அறிவுறுத்தினார்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் வேலைகளை தற்போதே துவங்கிவிட்டன. திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் காங்கிரஸ் அங்கம் வகிக்கிறது. பீகாரில் காங்கிரஸ் அடைந்த தோல்வி தமிழகத்திலும் எதிரொலிக்க வாய்ப்புகள் இருப்பதாகவும், அதனால் காங்கிரஸுக்கு சட்டமன்றத் தேர்தலில் குறைந்த இடங்களே அளிக்க வேண்டுமெனவும் திமுக நிர்வாகிகள் வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்தன.
ஆனால், பீகார் வேறு, தமிழகம் வேறு என்று விளக்கிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட 10 இல் 9 இடங்களை கைப்பற்றிவிட்டோம் எனத் தெரிவித்திருந்தார். தொகுதிப் பங்கீட்டில் திமுகவுடன் தேவையற்ற பேரங்கள் இருக்காது எனவும் காங்கிரஸ் விளக்கி இருந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் தமிழக தலைவர்களுடன் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கோவாவில் இருந்தபடி நேற்று இணைய வழியாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். கே.எஸ்.அழகிரி, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்ட தலைவர்கள் அதில் கலந்துகொண்டனர். சட்டமன்றத் தேர்தல் வெற்றி தொடர்பாகவும், எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடலாம் எனவும் ஆலோசனை நடத்தப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸால் 5-7 சதவிகிதம் வரை வாக்கு வங்கி இருப்பதாக தமிழக தலைவர்கள் குறிப்பிட்டனர்.
நிர்வாகிகளிடம் பேசிய ராகுல், 50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஆளுங்கட்சியாக இல்லை எனினும், வலிமையான கட்சியாகவே இன்னும் இருக்கிறது. நிர்வாகிகள் கடுமையான உழைப்பை செலுத்துவதன் மூலம் கட்சி மேலும் வலுப்பெறும் என்று அறிவுறுத்தினார்.
பாஜக அரசின் தவறுகளை தீவிரமாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டுமெனக் கூறிய ராகுல், அதிமுக ஆட்சியால் பாதிக்கப்படும் மக்களுக்கு விரைவில் விடிவு ஏற்படும் என்றார். தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கான வெற்றி பிரகாசமாக உள்ளது. வெற்றியை எளிதாக்க சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக உழைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நடைபெறும் ஏர்கலப்பை பேரணியில் ராகுல் காந்தி பங்கேற்பார் என கே.எஸ்.அழகிரி ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், ராகுல் காந்தி தமிழகம் வரும் தேதி குறித்து கூட்டத்தில் முடிவுசெய்யப்பட்டிருக்கிறது.
அரசு பயணமாக கடந்த வாரம் சென்னை வந்த பாஜக மூத்த தலைவரும், உள் துறை அமைச்சருமான அமித் ஷா, தேர்தல் தொடர்பான ஆலோசனையை முடித்துவிட்டு, அதிமுகவுடனான கூட்டணியையும் உறுதிசெய்துவிட்டுச் சென்றார். இந்த நிலையில் மற்றொரு தேசிய கட்சித் தலைவரான ராகுலும் ஆலோசனையை தொடங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.