தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடார் சமுதாய மக்களையும் ஒருங்கிணைத்து டிசம்பர் மாதம் மிகப்பெரும் மாநாடு நடைபெறும் என பாமக பொருளாளர் திலகபாமா தெரிவித்துள்ளார்.
சென்னை எழும்பூரில் நாடார் ஒற்றுமைத் திருவிழா கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்துரமேஷ் ஒருங்கிணைத்த இந்த கூட்டத்திற்கு பாமக பொருளாளர் உட்பட பல்வேறு நாடார் அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழச்சியில் பேசிய கவிஞர் திலகபாமா, சென்னையிலும் தமிழகம் முழுவதிலும் நாடார் சங்கங்கள் ஆயிரக்கணக்கில் இருப்பதை வலுப்படுத்தி அனைவரும் ஒரே கூடையின் கீழ் எல்லோரும் ஒருங்கிணைவதற்கான தொடக்கப்புள்ளியாக இந்த ஒற்றுமைத் திருவிழாவை தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்துரமேஷ் களப்பணியாற்றி ஒவ்வொருவரையும் நேரில் சென்று அழைத்து ஏற்பாடு செய்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் நாடார்கள் அத்தனை பேரையும் ஒருங்கிணைக்கும் மாநாடு நடைபெறும் என தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், அரசியலில் முக்கியத்துவம் பெறவும், அரசியலில் அதிகாரத்தைக் கைப்பற்றி சமுதாயத்திற்கும் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் உழைப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டும். ஆங்காங்கே பிரிந்து கிடக்கும் நாடார்கள், வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழ்பவர்களுக்கும், வேலைவாய்ப்பு, கல்வி வசதி இல்லாமல் வாழ்பவர்களுக்கும் இந்த சங்கம் ஒருங்கிணைந்து அவர்களுக்கான வாய்ப்புகளை வழங்கும் வகையில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. நாடார் சங்கத்தின் சொத்துகள் எதுவும் விற்பனைக்கு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நாடார்களுக்குப் பிரச்சனை வருகிற போது அனைவரும் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும் என்றும் திலகபாமா வலியுறுத்திப் பேசினார். நிகழ்ச்சியில் தமிழிசை சவுந்திரராஜன், என்.ஆர்.தனபாலன், விஜிபி சந்தோசம், சிம்லா முத்துச்சோழன் நடிகர் ஜீவா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





