ஜெயலலிதாவின் நினைவிடத்தை இடித்தால் ஆ.ராசாவின் கைகள் வெட்டப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தது சர்ச்சையாகியுள்ளது.
2 ஜியில் திமுக ஊழல் செய்தது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்ட, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதான் சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என பதிலளித்தார் திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா. அத்துடன், ஜெயலலிதாவை கொள்ளைக்காரி என விமர்சனமும் செய்தார். இதற்கு அதிமுகவிலிருந்து கடுமையான எதிர்வினையாற்றப்பட்டது.
கடையம் உள்ளிட்ட சில இடங்களில் ஆ.ராசாவின் உருவ பொம்மையை எரித்து அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடுமையான வார்த்தைகளால் ஆ.ராசாவை வசை பாடினார். இதனையடுத்து திமுக மற்றும் அதிமுக என இரு தரப்பினரும் மாறி மாறி குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, ஆ.ராசாவின் கையை வெட்டுவோம் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
ஆ.ராசாவுக்கு ஜெயலலிதாவைப் பற்றி பேசுவதற்கு அருகதையே கிடையாது என்ற அமைச்சர், ஆ.ராசாவுக்கு நாவடக்கம் வேண்டும். அண்ணா நினைவிடத்தில் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்று எழுதப்பட்டுள்ளது. அதைப்போல ஜெயலலிதாவின் நினைவிடத்தில் ஒரு வாசகத்தை எழுதவோம், ஆட்சிக்கு வந்தால் இடிப்போம் என்கிறார் ஆ.ராசா. இடித்தால் அவருடைய கை வெட்டப்படும். நாங்கள் அல்ல ஒன்றரை கோடி தொண்டர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்று ஆவேசமாகக் கூறினார்.
ஜெயலலிதாவை அவதூறாக பேசினால் ஒரு ராஜா என்ன ஓராயிரம் ராஜா வந்தாலும் இருக்கிற இடம் தெரியாமல் போய்விடுவார்கள் என்றும் கூறினார் கடம்பூர் ராஜு. இதற்கு தற்போது திமுக தரப்பிலிருந்து எதிர்ப்புகள் எழத் துவங்கியுள்ளது.