ரேஷன் கடைகள் முன்பு அதிமுக பேனர்கள் இருக்கக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.2,500 உள்பட பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இவ்வழக்கை பொங்கல் பரிசுத் தொகை டோக்கன்களில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், தலைவர்களின் படங்கள் இடம்பெற்றது. இதனை எதிர்த்து திமுக வழக்கு தொடர்ந்த நிலையில், தலைவர்களின் புகைப்படங்களை அச்சிடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த நிலையில் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி ரேஷன் கடைகளுக்கு வெளியே ஆளுங்கட்சியினர் பேனர்கள் வைப்பதாக திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசு சின்னம் பதித்து 39 ஆயிரம் ரேஷன் கடைகளின் முன்பு அதிமுகவினர் அனுமதியின்றி பேனர்கள் வைத்திருக்கின்றன. துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது” எனக் குற்றம்சாட்டினார். மேலும் அனுமதியின்றி பேனர்கள் வைக்க மாட்டோம் என்று ஆளும் கட்சி தரப்பில் உயர்நீதிமன்றத்தில் உத்தரவாதம் அளித்ததையும் சுட்டிக்காட்டினார்.
read more: திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு எத்தனை சீட்: மூத்த தலைவர் விளக்கம்!
இதனைத் தொடர்ந்து, ரேஷன் கடை அருகில் விளம்பரம் பேனர் இருக்கக்கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டனர். விளம்பர துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்க கூடாது. அனுமதி இன்றி பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தால் அவற்றையும் அகற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். எனினும், பரிசு தொகுப்பு பையில் முதல்வர், மறைந்த முன்னாள் முதல்வர் படங்கள் இடம்பெற அனுமதி வழங்கப்பட்டது.




