வெற்றிநடை போடும் தமிழகம் என்ற பெயரில் சட்டமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆரம்பிக்கிறார்.
சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரக் களம் தற்போது சூடுபிடித்துவிட்டது. அனைத்து கட்சிகளும் ஒவ்வொரு தலைப்பில் பிரச்சாரத்தை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டன. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகத்தை மீட்போம், அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்துள்ளார். கமல்ஹாசன் தமிழகத்தை சீரமைப்போம் என்ற தலைப்பில் பிரச்சாரம் செய்கிறார். அமமுக பொதுச் செயலாளர் தினகரன் இன்னும் தனது பயணத்தை துவங்கவில்லை.
இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி முதல்வர் பழனிசாமி தனது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் பிரச்சாரத்தைத் துவங்கினார். இதன் தொடர்ச்சியாக சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் அதிமுகவின் பிரச்சாரத் துவக்க விழா பொதுக் கூட்டம் நேற்று நடந்தது.
இந்த நிலையில் வெற்றி நடை போடும் தமிழகம் என்ற தலைப்பில் அதிமுக நாளை பிரச்சாரம் ஆரம்பிக்க உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதன்பின்னர் திருச்சி மாவட்டத்திலும் பிரச்சாரம் மேற்கொள்கிறார். 3 நாட்கள் நடைபெறும் இந்த பிரச்சாரத்தில் லாரி உரிமையாளர்கள், கோழிப் பண்ணை அதிபர்கள் என தொழில் துறையினரை சந்திக்கிறார் முதல்வர்.
read more: தேர்தல் நேரத்தில் பட்டா வழங்குவது ஏன்? ஸ்டாலின்
அரசின் சாதனைகளை ரிப்போர்ட் கார்டாக அச்சடித்து மக்களிடம் கொண்டு சேர்க்கவுள்ளது அதிமுக. குற்றப்பத்திரிகை என்ற தலைப்பில் அதிமுகவின் ஊழல்கள், விமர்சனங்களை நோட்டீஸாக பொதுமக்களிடம் திமுக கொண்டு சேர்த்துவரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரிப்போர்ட் கார்டு அடிக்கிறது அதிமுக.