விருதுநகரில் எந்தத் தொகுதியில் நின்றாலும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோற்பார் என அதிமுக எம்.எல்.ஏ.வே கூறியுள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு நடந்த இடைத் தேர்தலில் நின்று வெற்றிபெற்றவர் ராஜவர்மன். அதன்பிறகு அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் திருப்பதி உள்பட பல இடங்களுக்கு சென்று வரும் அளவுக்கு இணக்கமாக இருந்தார். சில மாதங்களாக இருவருக்கும் இடையே இருந்த பிரச்சினை தற்போது வெளிப்படையாகவே வெடிக்கத் துவங்கிவிட்டது.
கடந்த செப்டம்பர் மாதம் சாத்தூர் நடைபெற்ற கூட்டத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூலிப்படை வைத்து தன்னை கொலை செய்து விடுவதாக பேசியிருந்தார். அதன்பிறகு ஏற்பட்ட சமரசம் காரணமாக இருவரும் இணைந்து நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் அமைச்சர் மீது குற்றச்சாட்டுக்களை அள்ளி வீசியுள்ளார் எம்.எல்.ஏ.
read more: தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!
சாத்தூரில் தனது ஆதரவு நிர்வாகிகளை அழைத்து இன்று கூட்டம் நடத்திய ராஜவர்மன், சட்டமன்றத் தேர்தலில் 4 இடங்களில் தோற்றதற்கும், 11 யூனியனில் 7 இல் திமுக வெற்றிபெற்றதற்கும் காரணம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிதான். திமுகவுடன் மறைமுகத் தொடர்பு வைத்துக்கொண்டு அதிமுகவுக்கு துரோகம் செய்கிறார் எனக் குற்றம்சாட்டினார்.
இன்னும் 4 மாதங்கள்தான் இருக்கிறது. 2021 இல் அமைச்சரை விரட்டுவதற்கு மக்கள் தயாராகிவிட்டார்கள். அது சிவகாசி, ராஜபாளையம், விருதுநகர் என எந்தத் தொகுதியாக இருந்தாலும் சரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அமைச்சர் கண்டிப்பாக தோற்கடிக்கப்படுவார் என்றார் ராஜவர்மன். மேலும் அமைச்சர் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அதுதொடர்பாக தன்னிடம் உள்ள ஆடியோ ஆதாரத்தை தேவைப்பட்டால் பெறலாம் எனவும் இதுகுறித்து தலைமையிடம் புகாரளிக்கவுள்ளதாகவும் கூறினார் அதிமுக எம்.எல்.ஏ.
அமைச்சர் மீது அவருடன் நெருக்கமாக இருந்த அதுவும் சட்டமன்ற உறுப்பினரே புகார் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




