தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுக பிரச்சார பொதுக் கூட்டத்தில் கே.பி.முனுசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. பாஜகவுடனான கூட்டணியை அதிமுக அறிவித்துவிட்டாலும், பாஜக இதுவரை எதுவும் சொல்லவில்லை. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாஜக இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என்றே கூறி வருகிறார்கள்.
இதனிடையே அதிமுக ஆட்சியமைத்தால் பாஜகவுக்கும் பங்கு வேண்டும் என்று அழுத்தம் அளிப்பதாக தகவல்கள் வந்தன. அத்துடன், அடுத்த கூட்டணி ஆட்சியில் ஹெச்.ராஜா அமைச்சராக இருப்பார் என பாஜக மாநில துணைத் தலைவர் அண்ணாமலை பேசியதும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் அதிமுக தேர்தல் பிரச்சார துவக்க பொதுக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என அனைத்து நிர்வாகிகளும் அதில் கலந்துகொண்டனர்.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, “அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கொள்கையின்படி தான் அதிமுக ஆட்சி அமைக்கும். அதிமுக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கே இடமில்லை, தேவையுமில்லை. கூட்டணி அமைச்சரவை அமைக்கும் நினைப்பு யாருக்கும் வேண்டாம். அதிமுக தலைமையில்தான் கூட்டணி. எந்த தேசிய கட்சி இப்படி பேசி கூட்டணிக்கு வந்தாலும் அவர்கள் அதிமுகவுக்கு தேவையில்லை” என்றும் கூறினார்.
read more: ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் எப்போது? மருத்துவமனை தகவல்!
1967ஆம் ஆண்டுக்கு பிறகு தேசிய கட்சிகளை நுழைய விடாமல் திராவிடக் கட்சிகள்தான் ஆட்சியில் இருந்து வருகின்றன. திராவிட இயக்க ஆட்சி தமிழகத்தை சீரழித்துவிட்டதாக சில கருங்காலிகள் கூறுகிறார்கள். சில தேசிய கட்சிகள், சில சந்தர்ப்பவாதிகள், பெரியார் காலத்தில் இருந்து திராவிட இயக்கத்தை அழிக்க நினைப்பவர்கள் அப்படி சொல்கிறார்கள். எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா இல்லாத இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர் உள்ளே நுழைந்துவிடலாம் என நினைக்கிறார்கள் எனவும் பாஜகவை கடுமையாக விமர்சித்தார் கே.பி.முனுசாமி.




