திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அதிமுகவில் குழப்பம் விளைவிக்கப் பார்ப்பதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அனந்தலை கிராமத்தில் நேற்று நடந்த ஊராட்சி சபைக் கூட்டத்தில் ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது அதிமுக அரசை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின், அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவித்தார்கள். இரண்டு நாட்களாக பல தகவல்கள் வருகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை பாஜக, மோடி, நட்டாதான் முடிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர்களே கூறி வருகிறார்கள் என்றார்.
எப்போது பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து கழன்றுபோகிறார் எனத் தெரியவில்லை. எப்போது அதிமுக இரண்டாக உடையப்போகிறது எனத் தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக அதிமுக உடையப்போகிறது என்றும் குறிப்பிட்டு பேசினார்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் நேற்று பிரச்சாரம் தொடங்கிய முதல்வர், இரண்டாவது நாளாக இன்று திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் நடந்த பிரச்சாரத்தில் பேசினார். நாட்டு மக்களுக்காக உழைத்த ஒப்பற்ற தலைவர்கள் ஆரம்பித்தது அதிமுக என்ற முதல்வர், அதிமுகவை ஸ்டாலின் உடைக்கப் பார்க்கிறார். எந்தக்காலத்திலும் அதிமுக உடையாது. ஒரு தொண்டனைக் கூட ஸ்டாலினால் தொட்டுப் பார்க்க முடியாது என்றார்.
read more: ஸ்டாலின் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டி: சீமான்
ஏற்கனவே அதிமுகவை உடைக்க நடந்த அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன. ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் தீட்டிய சதித் திட்டமும் முறியடிக்கப்பட்டதால் அதிமுகவில் குழப்பம் விளைவிக்க முயற்சி செய்கிறார். ஒராயிரம் ஸ்டாலின் வந்தாலும் அதிமுகவை அசைக்க முடியாது என்று முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்தார்.