துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன், திடீரென ஆலோசனை நடத்தியது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை தற்போதே தொடங்கிவிட்டன. திமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் ஸ்டாலின் என்பது உறுதியான நிலையில், ஆளும் அதிமுக கட்சியில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பரபரப்பான சூழலில் ஆளுங்கட்சியான அதிமுகவின் செயற்குழு கூட்டம் கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளர் யார்? என்ற விவாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களுக்கும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களுக்கும் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றுள்ளது.

தொடர்ந்து, அ.தி.மு.க.வின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்று வரும் அக்டோபர் 7-ந் தேதி அறிவிக்கப்படும் என்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி அறிவித்தார்.
ஏற்கனவே முதலமைச்சர் வேட்பாளர் யார் என்ற சர்ச்சை அ.தி.மு.க.வில் சூடுபிடித்து வரும் நிலையில், இந்த அறிவிப்பு கட்சிக்குள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில், துணை முதலமைச்சரும், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் சென்னை, கிரின்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் தனது ஆதரவாளர்களான துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையில் முதலமைச்சர் வேட்பாளர் குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் தலைமையிலான மருத்துவக் குழு உடனான ஆலோசனைக் கூட்டத்தில் கூட பங்கேற்காமல்,
முதலமைச்சர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக வழிகாட்டுதல் குழு அமைத்தல், அடுத்தகட்ட ஆலோசனைக் கூட்டம் உள்ளிட்டவை குறித்தும் ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் விவாதித்து இருப்பது கட்சிக்குள் ஓபிஎஸ்-இபிஎஸ் இடையேயான மோதலை பகிரங்கப்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஓபிஎஸ் உடனான ஆலோசனையில் பங்கேற்ற பிறகு, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான முன்னாள் எம்.பி. வைத்திலிங்கம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
இது தனிப்பட்ட சந்திப்பு. கே.பி.முனுசாமியும் தனிப்பட்ட ரீதியில் துணை முதலமைச்சரை சந்தித்துள்ளார். இது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு இல்லை. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அக். 7-ம் தேதி பார்த்துக்கொள்ளலாம்.
குழப்பம் இல்லை
அ.தி.மு.க. மீண்டும் ஆட்சி அமைப்பதற்குத்தான் என்னுடைய ஆதரவு. அ.தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு உறுதுணையாக இருப்பேன். கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவருக்கும் ஆதரவாக இருப்பேன். அ.தி.மு.க. ஆட்சியில் எந்தக் குழப்பமும் இல்லை. மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும் என கூறினார்.




