அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரைக்கு சொந்தமான பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள நிலங்கள் தொடர்பாக சர்வே மேற்கொண்டு அறிக்கை அளிக்க, தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை அடுத்த கோனம்பேடு கிராம நிலங்களை, அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், மக்களவை முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரையின் கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம், ஆக்கிரமித்து மின்சார துணை நிலையம் மற்றும் தனியார் பாதை , மாணவ மாணவிகள் தங்கும் விடுதி கட்டி உள்ளதாக கூறி, கோனம்பேடு கிராம பொது நல சங்கத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கிராமத்திற்கு அருகிலுள்ள ஆவடி நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லாததால், ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்டு பள்ளியின் வசதிக்காக வழங்க வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், நீதிபதி வி.சிவஞானம் அமர்வு, கிராமத்தில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலங்களை அளவீடு செய்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்கும்படி, மாவட்ட வருவாய் அதிகாரிக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தது.