அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனியார் மருத்துவமனையில் பரிசோதனைகள் அனைத்தும் முடிந்து நல்லபடியாக வீடு திரும்பினார்.
சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் சாலையில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் தமிழக எதிர்கட்சித் தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை அனுமதிக்கப்பட்டார். கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி, எடப்பாடி பழனிசாமிக்கு இதே மருத்துவமனையில் தான் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று லேசான வயிறு வலி இருப்பதன் காரணமாக இன்று காலை 6.30மணிக்கு பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனையில் எடப்பாடி பழனிசாமிக்கு என்டாஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, மருத்துவர்கள் சில அறிவுரைகளை வழங்கினர். இதனை தொடர்ந்து 8 மணி நேர பரிசோதனைக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி வீடு திரும்பினார். எடப்பாடியார் மருத்துவமனையில் அனுமதி என்ற செய்தி வெளியானதுமே அதிமுக தொண்டர்கள் இடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. எனவே பரிசோதனைக்காக மட்டுமே எடப்பாடியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மருத்துவமனைக்கு அதிமுக வினர் நலம் விசாரிக்க வரவேண்டாம் என அவர் அறிவுறுத்தியதால் அதிமுகவினர் யாரும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.