உ.பி தேர்தலுக்கு அனைத்து எம்.பி-களும் தொகுதி வாரியாக தீவிரமாக பணியாற்ற வேண்டும் – 4வது முறையாக நடைபெற்ற எம்.பி-களுடனான கூட்டத்தில் பிரதமர் வலியுறுத்தல்.
டெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா எம்பி-களுடன் காலை ஆலோசனை நடத்தினார். 2022ம் தொடக்கத்தில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா ஆகிய மாநிலத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு அரை இறுதியாக ஐந்து மாநில தேர்தல் கருதப்படும் நிலையில் உத்தரபிரதேச மாநில தேர்தலுக்கு பாஜக அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. முக்கியமாக கிடப்பில் இருந்த பல்வேறு திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டும், இந்துத்துவா சார்ந்த திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டப் பணிகளை துவக்கி வைத்தார். மேலும் தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திட்டங்களை தொடங்கி வைக்கும் நிகழ்வுகளை பாரதிய ஜனதா பயன்படுத்திக்கொள்கிறது. அந்த வகையில் இன்று காலை பிரதமர் நரேந்திர மோடி கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் தன்னுடைய இல்லத்தில் பாஜக எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். 40க்கும் மேற்பட்ட எம்பிக்கள் பங்கேற்றதாகவும் அவர்களுக்கு காலை உணவு பிரதமருடைய இல்லத்திலேயே வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. இந்த சந்திப்பின்போது 2022ல் நடைபெறவுள்ள உத்தரப்பிரதேச மாநில தேர்தல் குறித்தும் தேர்தல் பிரச்சாரங்களை ஒவ்வொரு எம்பிக்களும் அவர்களுடைய தொகுதியில் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்பது குறித்தும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார். மேலும் மாநிலத்தில் ஒவ்வொரு தொகுதியையும் இணைக்கும் வகையில் யாத்திரைகள் நடத்த வேண்டுமென கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மிக முக்கியமாக விவசாயிகள் போராட்டம் லக்கிம்பூர் விவகாரம் உள்ளிட்டவற்றை கடந்து தேர்தலின் வெற்றிக்காக அனைவரும் சேர்ந்து உழைக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கிறது.
குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய பிறகு பிரதமர் நரேந்திர மோடி தென்மாநில எம்பி-கள், வடமாநில எம்பி-கள் மற்றும் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த எம்பி-களுடன் தனித்தனியாக சந்திப்புகளை நடத்தி உள்ளார். இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநில எம்.பி-களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பு நான்காவது சந்திப்பு என கூறப்படுகிறது.