தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பதற்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்பட முதல்வர் அனுமதி அளித்துள்ளார். பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் எதிர்கால நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பாமகவின் அன்புமணி ராமதாஸ், கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முற்றிலுமாக ஓயவில்லை. சிறிய வாய்ப்பு கிடைத்தாலும் கூட கொரோனா வைரஸ் முன்பை விட வேகமாக பரவும் ஆபத்து உள்ளது. பள்ளிகளைத் திறக்கும் விஷயத்தில் இது கருத்தில் கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் உருவாகியுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் இப்போது ஐரோப்பிய நாடுகள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது என்ற அவர், அண்டை மாநிலங்களில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டிருப்பது உண்மை தான். ஆனால், அங்கெல்லாம் கொரோனா வைரஸ் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது என்பதும் மறுக்க முடியாத உண்மையாகும் என சுட்டிக்காட்டினார்.
இத்தகைய சூழலில் தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பது மருத்துவ ரீதியில் சரியான முடிவாகத் தோன்றவில்லை. ஒரே ஒரு கழிப்பறையை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அவற்றைப் பயன்படுத்தும் போது கொரோனா பரவலுக்கான ஆபத்துகள் அதிகம் உள்ளன. பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால், அது அவர்கள் மூலமாக வீட்டில் உள்ள பெரியவர்களுக்கும் பரவக்கூடும்.இதேநிலை தொடர்ந்தால் அடுத்த சில வாரங்களில் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு சென்று விடும் என எச்சரிக்கை விடுத்தார்.
read more: உதயநிதி ஸ்டாலின் மீது குற்றப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசிகள் அடுத்த வாரம் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், நிலைமை ஓரளவு சீரடைந்த பின்னர் பள்ளிகளைத் திறப்பது தான் சரியானதாக இருக்கும் என்று ஒரு மருத்துவராக நான் கருதுகிறேன். எனவே, 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறக்கும் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.