டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு 13ஆவது நாளாக இன்று போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களை நேற்று நேரில் சந்தித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய ஆதரவினையும் போராட்டத்திற்கு தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் முதல்வர் கெஜ்ரிவாலின் நிகழ்ச்சிகள் இன்று வற்புறுத்தி ரத்துசெய்யப்பட்டதாகவும், உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் அவரை வீட்டுக்காவலில் வைத்துள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளது ஆம் ஆத்மி. இதுதொடர்பாக அக்கட்சியின் ட்விட்டர் பக்கத்தில், “சிந்து எல்லையில் போராடும் விவசாயிகளை முதல்வர் கெஜ்ரிவால் நேற்று சந்தித்த பிறகில் இருந்து அவரை டெல்லி பாஜக காவல் துறை வீட்டுக்காவலில் வைத்துள்ளது. அவரது வீட்டுக்கு ஒருவர் கூட உள்ளேயோ அல்லது வெளியேயோ செல்ல அனுமதிக்கப்படவில்லை” குறிப்பிடப்பட்டுள்ளது.
எங்கள் எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்திக்கச் சென்றபோது அவர்கள் அடித்து வீதிகளில் வீசப்பட்டனர். கட்சி தொண்டர்களையும் சந்திக்க அனுமதிக்கப்படவில்லை என்று ஆம் ஆத்மி செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறினார். கெஜ்ரிவால் வீட்டுக்கு வந்த துணை முதல்வர் மனீஷ் சிசோடியா, பொதுமக்கள் யாரையும் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்கவில்லை. இது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருப்பது இல்லையா? காவல் துறையினர் ஏன் இங்கு குவிக்கப்பட்டுள்ளனர் எனக் கேள்வி எழுப்பினார்.
எனினும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்த டெல்லி வடக்கு மாவட்டத்திற்கான காவல்துறை துணை ஆணையர் அன்டோ அல்போன்ஸ், “முதல்வரை நாங்கள் வீட்டுக் காவலில் வைத்திருப்பதாகக் கூறுவது பொய். அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று இரவு 8 மணியளவில் வீட்டை விட்டு வெளியேறி இரவு 10 மணியளவில் திரும்பினார். எந்த பிரச்சினையும் இல்லை. இன்று அவரை நாங்கள் தடுத்து வைக்கவில்லை”என்று தெரிவித்தார்.




