வரும் சட்டமன்றத் தேர்தலில் சமக தனிச் சின்னத்தில்தான் போட்டியிடும் என நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து வெளியேறி சமத்துவ மக்கள் கட்சியை ஆரம்பித்த நடிகர் சரத்குமார், 2011 சட்டமன்றத் தேர்தலில் அதே அதிமுகவுடன் கூட்டணி அமைத்தார். அக்கட்சியின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் தென்காசியில் போட்டியிட்ட சரத்குமாரும், நாங்குநேரியில் எர்ணாவூர் நாராயணனும் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2016 தேர்தலில் திருச்செந்தூர் தொகுதியில் நின்று தோல்வியைத் தழுவினார் சரத்குமார். 2019 மக்களவைத் தேர்தலிலும் சமத்துவ மக்கள் கட்சி அதிமுகவுக்கு ஆதரவளித்தது. வரும் சட்டமன்றத் தேர்தலுக்காக தற்போது அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. கூட்டணி பேச்சுவார்த்தைகளும் தற்போதே மறைமுகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற சமத்துவ மக்கள் கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் புதிய கட்சி கொடியினை அறிமுகம் செய்து வைத்தார் சரத்குமார். அப்போது, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி தொடரும். திமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். தேர்தலில் சமக தனி சின்னத்தில் போட்டியிடும். முதல்வர் பேச அழைக்கும் போது எங்கள் கோரிக்கையை முன்வைப்போம். கூட்டணி பேச்சுவார்த்தையின் போது தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
read more: திமுக மா.செ.க்கள் கூட்டம்: துரைமுருகன் அறிவிப்பு!
அரசியலுக்கு வரவில்லை எனக்கூறிய ரஜினிகாந்திடம் ஆதரவு கோரப்போவதில்லை என்று அறிவித்த அவர், கூட்டணி தொடர்பாக மக்கள் நீதி மய்யம் இதுவரை பேச்சுவார்த்தை நடத்தவில்லை. மிகப்பெரிய தலைவர்கள் மறைந்த பிறகு, ஆட்சியை முதலமைச்சர் பழனிசாமி சிறப்பாக நடத்தி வருகிறார் என்று புகழாரம் சூட்டினார். மேலும் அதிமுக மீண்டும் ஊழல் புகார் கொடுக்கும் திமுகவின் 2ஜி ஊழல் புகாரை என்ன சொல்வது எனக் கேள்வி எழுப்பினார் சரத்குமார்.