தேர்தலின் போது திமுக உடன் கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக, பாஜக மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் கூட்டணி கணக்குகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. சமீபத்தில், கூட்டணி தொடர்பாக பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், தேர்தல் சமயத்தில் கூட்டணியில் உள்ள கட்சிகள் மாற வாய்ப்பு உள்ளது என்பது போல் பேசியிருந்தார். அவரது பேச்சு, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விசிக போன்ற கட்சிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணனும் அதே மாதிரியான கருத்தை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த பொன்ராதாகிருஷ்ணன் கூறியதாவது, அதிமுக முதலமைச்சர் வேட்பாளரை அறிவித்திருக்கலாம்.
ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், முதலமைச்சர் வேட்பாளரை தேர்தல் நேரத்தில்தான் அறிவிக்கும். மேலும், தேர்தலுக்கு முன்பாக கூட்டணிகளில் மாற்றம் ஏற்படலாம். நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம். திமுகவுடன் கூட்டணி வைக்கலாம். இந்த இரண்டு கட்சிகளும் இல்லாது வேறு கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம். பாஜக தலைமையில் அணி அமையலாம். எல்லாவற்றுக்கும் வாய்ப்பு இருக்கிறது என அதிரடியாக பேசி இருப்பது, பாஜக-அதிமுக கூட்டணியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக பேசியுள்ள அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன், பாஜகவின் தேசிய பொதுச் செயலாளர் அந்தஸ்தில் உள்ளவர்களோ, அல்லது அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா, அமித் ஷா போன்ற பெரிய தலைவர்களோ கூட்டணி பற்றி கூறினால் அதை முடிவாக எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி உள்ளூர் தலைவர்கள் கூறுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை என்று மறைமுகமாக பொன் ராதாகிருஷ்ணனுக்கு குட்டு வைப்பது போல பேசினார்.