வார இறுதி நாட்களில் கோயில்களில் பக்தர்களை அனுமதிக்க கோரி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளிகள் மற்றும் டாஸ்மாக் திறக்கப்பட்டுள்ள நிலையில், வார இறுதி நாட்களில் கோயில்களை மட்டும் திறக்க தமிழக அரசு மறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் கையில் தீச்சட்டி ஏந்திய படி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது: ஆளும் கட்சி செய்யும் நல்ல மக்கள் பணிக்கு எப்போதுமே பாஜகவினர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். இல்லாத கொரோனாவை காரணம் காட்டி உரிமையை மறுக்கும் போது, இதை மக்கள் போராட்டமாக எடுக்க வேண்டிய கட்டாயம் தமிழக பாஜகவிற்கு உள்ளது. பள்ளிகளை திறக்க வேண்டும் என அரசு கூறிய போது, அதற்கு ஆதரவு தெரிவித்தோம். இதே அரசு திரையரங்குகளை திறக்க வேண்டும் என சொன்ன போது எதிர்ப்பு தெரிவித்தோம். காரணம் கொரோனாவை காரணம் காட்டி கோயில்களை மூடிவிட்டு, திரையரங்குகளை திறக்க அனுமதி அளித்தது ஏற்புடையது அல்ல.
எதிர்க்கட்சியாக இருந்த போது டாஸ்மாக் வேண்டாம் என சொன்ன அரசு, ஆளும் கட்சியாக மாறிய பிறகு வேகமாக டாஸ்மாக்கை திறந்தது. கடவுள் இல்லை, கோயில் இல்லை என்ற திமுகவின் சித்தாந்தத்தை மக்களின் தனிப்பட்ட விஷயங்களில் திணிக்க முயற்சிக்கிறது. வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களை மூடிவிட்டு, அவர்களது கடவுள் இல்லை என்ற கொள்கையை திணிக்க முயற்சிப்பதாக குற்றச்சாட்டினார்.
இந்துக்கள் மட்டுமல்ல கிறிஸ்துவர்கள், முஸ்லாமியர்கள் என அனைத்து மதத்தினரும் வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மாநில அரசுக்கு 10 நாட்கள் கெடு விதிக்கிறோம். அதற்குள் மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்ப்பார்கள் என நினைக்கிறோம். அப்படி செவி சாய்க்காவிட்டால் மிகப்பெரிய போராட்டத்தை நடத்தி அரசையே ஸ்தம்பிக்க வைப்போம் என திமுக அரசுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.




