முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை ஏற்க மாட்டோம் என எங்கேயும் சொன்னதில்லை என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போதைய கூட்டணி வரும் சட்டமன்றத் தேர்தலில் தொடரும். ஆனால் யார் முதல்வர் வேட்பாளர் என்றும் யார் தலைமையில் தேர்தலை சந்திப்பது என்பதை பாஜக மத்திய தலைமைதான் முடிவு செய்யும் என நேற்று முன்தினம் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் கூறினார்.
அக்டோபர் மாதமே அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு, அவர்களை ஏற்பவர்களுடன் மட்டுமே கூட்டணி என அதிமுக தலைமை அறிவித்துவிட்டது. சமீபத்தில் பாஜகவுடனான சட்டமன்றத் தேர்தல் கூட்டணியையும் அதிமுக உறுதிப்படுத்திவிட்ட நிலையில், எல்.முருகனின் பேச்சு கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.
முருகனின் கருத்து ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என அமைச்சர் ஜெயக்குமார் கூற, கூட்டணிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் தொடர்ந்து எல்.முருகன் பேசி வந்தால், பாஜக தலைமை அவரை பதவியிலிருந்து நீக்க வேண்டி வரும் என எச்சரித்தார் அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி.
read more: சட்டமன்றத்தில் மீனவப் பிரதிநிதி: உறுதியளித்த கமல்ஹாசன்
இவ்வாறாக எதிர்வினைகள் எழ தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம் பேசிய முருகன், “அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் அறிவித்துள்ளார்கள். ஆனால் எங்கள் தேசியத் தலைமையும், நாடாளுமன்றக் குழுவும் அதை பரிசீலனை செய்து உரிய நேரத்தில் முடிவு அறிவிப்பார்கள் என்றார். மேலும், நாங்கள் எந்த இடத்திலும் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொல்லவில்லை” என்று விளக்கம் அளித்தார்.




