பல மாநிலங்களில் ஆட்சி அமைத்தது போல தமிழகத்திலும் பாஜக ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் தேசியத் தலைவர் நட்டா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசிய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகம் வருவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா நேற்று தமிழகம் வருகை புரிந்தார். சென்னை மதுரவாயல் ஆலப்பாக்கம் சாலை சீமாத்தம்மன் நகா் பகுதியில் பாஜக நடத்திய பொங்கல் விழாவில் வேட்டி சட்டையுடன் நட்டா கலந்துகொண்டார்.
பின்னர் மேடையில் பேசிய நட்டா, இந்தியாவின் ஒட்டு மொத்த வளர்ச்சியில் கவனம் செலுத்தி வரும் பிரதமர் மோடி, தமிழகத்தின் வளர்ச்சியில் தனி கவனம் செலுத்து வருவதாக தெரிவித்தார். ஒரு ஆளுமைமிக்கத் தலைவர் மறைந்த பிறகும் முதல்வர் பழனிசாமி ஆட்சியைத் தக்கவைத்துள்ளது, அவரது திறமையை வெளிக்காட்டுகிறது, அது எனக்கே ஆச்சரியமாக உள்ளது. தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளின் அர்ப்பணிப்பையும், உழைப்பையும் பார்க்கும் போது வரும் தேர்தலில் பாஜக முக்கிய இடம் வகிக்கும் என்பது தெளிவாக தெரிவதாக அவர் கூறினார்.
பொங்கல் விழா நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தில் நடைபெறவுள்ள துக்ளக் பத்திரிகையின் 51ஆவது ஆண்டு விழாவில் ஜே.பி.நட்டா பங்கேற்றார். துக்ளக் டிஜிட்டல் டாட் காமை தொடங்கி வைத்து, சோ எழுதிய புத்தகத்தை நட்டா வெளியிட்டார்.
read more: கொரோனா தடுப்பூசி செலுத்த அவசரப்படுவது ஏன்? மார்க்சிஸ்ட் கேள்வி!
அங்கு உரையாற்றிய அவர், மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்ததால், மக்கள் ஆதரவில் பல்வேறு மாநிலங்களில் வெற்றி பெற்று, பாஜக ஆட்சியைக் கைப்பற்றி உள்ளது. அதே போன்ற வெற்றியை, தமிழகத்திலும் பெற வேண்டும் என்பதுதான் எங்கள் எண்ணம். உங்கள் ஆதரவுடன் அது நிறைவேறும் என எதிர்பார்க்கிறோம்.தமிழகத்தின் முதன்மைக் கட்சியாக பாஜ வளர, எங்கள் நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள். நிச்சயம் தமிழகத்தில் தாமரை மலரும் என்று நம்பிக்கைத் தெரிவித்தார்.