முதல்வரை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன், அதிமுகவுடன் கூட்டணி வலிமையாக இருப்பதாகத் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தலைமைச் செயலகத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, பாஜக நடத்திய புதிய கல்வி கொள்கை ஆதரவு பிரச்சாரத்தின்போது அதற்கு ஆதரவாக 50 லட்சம் கையெழுத்துப் பிரதிகள் பெற்றதாகக் கூறி அதனை சமர்பித்தார். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அதிமுக-பாஜக கூட்டணிக்குள் எழுந்துள்ள சலசலப்பு குறித்து இச்சந்திப்பில் விவாதிக்கப்பட்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர் கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், புதிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக 50 லட்சம் பேர் கையெழுத்திட்டுள்ளனர். தேசிய கல்வி கொள்கை ஆதரவு கூட்டமைப்பு சார்பில் 2லட்சம் கையெழுத்துப் பிரதிகள் பெறப்பட்டன. இதனை முதல்வரை நேரில் சந்தித்து சமர்ப்பித்தோம் என்று தெரிவித்தார்.திமுகவினர் நடத்தும் பள்ளிகளில் ஐந்து மொழிக் கொள்கை வரை நடைமுறையில் இருப்பதாகவும் அரசியலுக்காக அவர்கள் இரட்டை வேடம் போடுவதாகவும் கூறிய முருகனிடம், கூட்டணி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
read more: பொங்கல் பரிசு டோக்கனை அதிமுகவினர் மூலம் வழங்குவதா? ஸ்டாலின் எதிர்ப்பு!
அதிமுக-பாஜக கூட்டணி நீடித்துக் கொண்டிருக்கின்றது என்றும், எங்களின் கூட்டணி வலிமையான கூட்டணி என்றும் தெரிவித்தார். மற்றவை குறித்து ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளிவரும். மேலும், முதலமைச்சர் வேட்பாளர் தொடர்பான கேள்விகளுக்கு பதில் சொல்லாமல், கூட்டணி தொடர்கின்றது என்பதை மட்டும் கூறி பேட்டியை நிறைவு செய்தார் முருகன்.