கொள்ளையடித்த பணத்தில் 2,000 ரூபாயை தேர்தல் நேரத்தில் தருவதுதான் தமிழக அரசியல் என அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், பொதுமக்களை சந்தித்து சட்டங்களின் நன்மைகளை பாஜக விளக்கி வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் நேற்று நடந்த நிகழ்வுகளில் பாஜக மாநில துணைத் தலைவரும், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியுமான அண்ணாமலை கலந்துகொண்டார்.
அப்போது உரையாற்றிய அண்ணாமலை, மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் இருந்து தேர்தல் நேரத்தில் 2 ஆயிரம் ரூபாய் கொடுப்பதுதான் தமிழக அரசியல். ஆனால், மோடி அரசியல் கடந்த 6ஆண்டுகளாக ஒவ்வொரு தனி மனிதனின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வருகிறது. விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாயை வழங்கி அவர்களை நேராக நடக்க வைக்கிறது. ஆகவே, 2 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார்கள் என்பதற்காக 5 வருடங்களுக்கு வாழ்க்கையை அடமானம் வைத்துவிட வேண்டாம் என்றார்.
read more: மக்கள் சேவைக் கட்சி: ரஜினிக்கு கிளம்பிய எதிர்ப்பு!
முதல்வர் வேட்பாளர் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் முருகன் தெரிவித்த கருத்து அதிமுக-பாஜக கூட்டணிக்குள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பொங்கல் பரிசாக அதிமுக அரசு அறிவித்துள்ள 2 ஆயிரம் ரூபாயை இவ்வாறு விமர்சித்துள்ளார் அண்ணாமலை.
மேலும், “நீங்கள் விலைமதிப்பு இல்லாதவர்கள். உங்களை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது. பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை எனில் தலையில் சீரியல் செட் கட்டுபவர்களும், காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்களும்தான் அரசியல்வாதிகளாக வருவார்கள்” எனவும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அதிமுக மூத்தத் தலைவர் செம்மலை, “அரசாங்கத்திற்கு வரும் பணமெல்லாம் கொள்ளையடிக்கப்பட்ட பணம் என்று கருதுவதா? பொங்கல் பரிசு குறித்து அண்ணாமலை கூறுவது அவரது அறியாமையை காட்டுகிறது. பாஜக தலைமை அவரை கண்டிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.