தமிழ்நாடு பட்ஜெட் ஒரு பேன்டசி புத்தகம் என பாமக பொருளாளர் திலகபாமா விமர்சித்தார். இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டிற்கு தேர்தல் வரப்போகிறது என்றால் திமுக குஷியாகி விடும். ஆட்சியில் இருந்தால் அறிவிப்புகள் வாயிலாகவும், ஆட்சியில் இல்லையென்றால் வாக்குறுதிகள் வாயிலாகவும் கம்பி கட்டும் கதைகளை அவிழ்த்து விடத் தொடங்கி விடும். அதில் ஒரு ஆனந்தம் திமுகவிற்கு.
இன்றைய பட்ஜெட்டிலும் அதேதான் நடந்திருக்கிறது. நான்காண்டுகளில் இதுபோன்ற புதிய அறிவிப்புகள் எதுவும் வரவில்லையே, ஏன்? அப்போதெல்லாம் மாணவர்கள், பெண்கள் மீதான அக்கறை எல்லாம் எங்கே போனது?
முதல்வன் என்கிற படத்தில் வசனம் ஒன்று வரும். ‘இவரே கு*ண்டு வைப்பாராம். இவரே எடுப்பாராம்’ என்று. அதையே நம் முதலமைச்சரும் செய்திருக்கிறார். நிதியமைச்சர் பட்ஜெட் தாக்கல் செய்வாராம். உடனே நம் முதலமைச்சர், இந்த பட்ஜெட் தமிழ்நாட்டின் மேம்பட்ட எதிர்கால வளர்ச்சிக்கு உறுதியான அடித்தளம் அமைத்திருக்கிறது என்பாராம். ‘நவீனத் தமிழ்நாட்டை உருவாக்கிடும் முன்முயற்சிகள்! விளிம்பு நிலை மக்களை அரவணைக்கும் தாயுமானவரின் கரங்கள் என அனைவருக்குமான திட்டங்கள் பல இன்று அறிவிக்கப்பட்டுள்ளன’ என்று புகழாரம் சூட்டிக் கொள்வாராம்.
‘தமிழ்நாடெங்கும் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் தொழிற்பூங்காக்கள்’ எல்லாம் கடந்த நான்காண்டுகளில் நினைவுக்கு வரவில்லையா?
‘மகளிர் நலன் காக்கும் மாபெரும் திட்டங்கள்’ ‘இளைஞர்களுக்கு உலகை வெல்லும் உயர்தொழில்நுட்பம்,
எல்லாம் மறந்து போய்விட்டதா?
🏙️ புதிய நகரம்
🛫 புதிய விமான நிலையம்
💧 புதிய நீர்த்தேக்கம்
🚆 அதிவேக ரயில் சேவை – என ஆட்சி முடியும் தருவாயில் தமிழ்நாட்டின் மீதுதான் என்னவொரு அக்கறை முதலமைச்சருக்கு?!
நம் முதலமைச்சரை எதற்கெடுத்தாலும் குறை சொல்லக் கூடாது. ஏன் தெரியுமா? தமிழ்நாட்டை நம்பர் ஒன் மாநிலமாக மாற்றியிருக்கிறார். எதில் தெரியுமா? இந்தியாவிலே அதிக கடன் வாங்கும் மாநிலப் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது.
இந்த மார்ச் வரையிலான கடன் தொகை தோராயமாக 8 கோடியே 33 லட்சத்திற்கு சென்று விட்டது. (₹8,33,361.80) அறிவித்த திட்டங்களுக்கு எல்லாம் அரசாணைகள் வெளியிட்டு டெண்டர் கோரி ஆறுமாத காலத்திற்குள் அதையெல்லாம் இந்த அரசு நிறைவேற்றப்போகிறது என்றால் நிச்சயம் சூப்பர் பவர் கணினியை விட வேகம் தான் போல.
வாங்கிய கடனே கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கிறது. இதில் புதிய அறிவிப்புகளுக்கான செலவீனங்களுக்கு எந்த வகையில் வருவாய் வரும்?
‘எல்லோர்க்கும் எல்லாம்’ என்று சொல்லி விட்டு எல்லோரையும் கடனாளிகளாக மாற்றுகிறீர்களா முதலமைச்சர் அவர்களே!
சிறுவர்கள் படிக்கும் காமிக்ஸ் புத்தகங்களில் குதிரை பறக்கும், சிங்கம் பேசும், தவளை இளவரசியாகும். படிக்கப் படிக்க சுவாரசியமாக இருக்கும். ஆனால் நிஜத்தில் துளி கூட சாத்தியமல்லாத கற்பனைகளால் நிரம்பியிருக்கும். இன்று சட்டப் பேரவையில் பட்ஜெட் என்கிற பெயரில் பேன்டசி கதைப் புத்தகத்தை வாசித்து முடித்திருக்கிறார் நிதியமைச்சர்.