முந்திரி ஆலை தொழிலாளி கொலை வழக்கில் கைதான திமுக எம்.பி. ரமேஷ் காவல்துறையினரால் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகில் உள்ள பணிக்கன் குப்பம் என்ற இடத்தில் திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர்.வி.எஸ்.ரமேஷ்க்கு சொந்தமான முந்திரி ஆலை உள்ளது. இந்த ஆலையில் வேலை செய்து வந்த கோவிந்தராசு எனும் பாமக நிர்வாகி கடந்த செப்டம்பர் மாதம் 19 ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கோவிந்தராசின் மகன் செந்தில்வேல் காடாம்புலியூர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் பாமகவினர் வழக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் திமுக எம்பி ரமேஷ் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், 5 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் தலைமறைவாக இருந்த திமுக எம்பி ரமேஷ் கடந்த 11 ஆம் தேதி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதற்கிடையில் பிரேத பரிசோதனை அறிக்கையில் கோவிந்தராசன் அடித்து துன்புறுத்தப்பட்டு விஷம் வைத்து கொலை செய்யப்பட்டிருப்பதும் அம்பலமாகியது. மேலும், திமுக எம்.பி ரமேஷை மூன்று நாட்கள் வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், இன்றுடன் மூன்று நாள் நீதிமன்ற காவல் முடிவடைகிறது. எனவே, திமுக எம்பி ரமேஷை காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி உள்ளனர். மேலும், ரமேஷிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்துவதற்கு அனுமதி கோரி மனுதாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக எம். பி ரமேஷ் தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிப்பேன் எனத் தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.