சிபிஎஸ்இ 10ம் வகுப்பு வினாத்தாள் சர்ச்சை! பாஜக அரசு பெண்களுக்கு எதிரான கருத்துகளை ஆதரிப்பதாக பிரியங்கா காந்தி கண்டனம்.
டெல்லி,
சமீபத்தில் நடைபெற்ற 12ம் வகுப்பு சிபிஎஸ்இ ( CBSE ) சமூகவியல் தேர்வில், 2022ல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை எந்தக் கட்சியின் கீழ் நடந்தது? என கேள்விகள் கேட்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. பின்னர், இவை பொருத்தமற்ற கேள்வி என சிபிஎஸ்சி நிர்வாகம் தரப்பில் இருந்து ஒப்புக்கொண்ட நிலையில் மீண்டும் பத்தாம் வகுப்பு வினாத்தாளில் புதிய சர்ச்சையை சிபிஎஸ்இ நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி தேர்வில்,
“முன்பெல்லாம் கணவனுக்கு மனைவி கீழ்ப்படிந்து நடந்த நிலையில், தற்போது அவ்வாறு இல்லாததால் அதைக் காணும் குழந்தைகள் மற்றும் வீட்டுப் பணியாளர்களிடம் ஒழுங்கீனம் ஏற்பட்டுள்ளதாக” குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் இதற்கு பெண்கள் மத்தியில் சிபிஎஸ்இ நிர்வாகத்திற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டுவிட்டரில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியான வினாத்தாளை மேற்கோள்காட்டி,
“நம்ப முடியாத ஒன்று எனவும் உண்மையிலே நாங்கள் இதனை தான் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுக்கிறோம் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பெண்களைப் பற்றிய பிற்போக்குத் தனமான கருத்துக்களை பாரதிய ஜனதா அரசு ஆதரிக்கிறது என பதிவிட்டுள்ளார்.