700 தூய்மைப் பணியாளர்களின் வேலை பறிக்கப்பட்டதற்கு திமுக, அமமுக ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
கொரோனா காலத்தில் அனைவரும் வீடுகளில் முடங்கிக் கிடந்த நேரத்தில், தன் உயிரையும் பொருட்படுத்தாமல் முன் களத்தில் நின்றவர்கள் தூய்மைப் பணியாளர்கள். தெருக்களை சுத்தம் செய்வது, மருந்து தெளிப்பது உள்ளிட்ட அவர்கள் நடவடிக்கைகளும் தமிழகத்தில் கொரோனா குறைய மிக முக்கியமான காரணமாகும்.
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் கொரோனாவைக் குறைக்க போராடிய ஒப்பந்த தூய்மைப்பணியாளர்கள் சுமார் 700 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக தூய்மைப்பணியாளர்களாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர். பொங்கல் நேரத்தில் இவர்களின் நீக்கத்திற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
திமுக மகளிரணிச் செயலாளரும், மக்களவை உறுப்பினருமான கனிமொழி, கொரோனா போர் வீரர்கள் தமிழகமெங்கும் கொண்டாடப்பட்டாலும், இந்த இபிஎஸ் அரசு சென்னையில் 700 துப்புரவு தொழிலாளர்களின் வேலையை பறித்துள்ளது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
நாம் பெருந்தொற்றின்போது அவர்களை சார்ந்து இருந்தபோதும், அவர்களுக்கு உரிய நேரம் தரப்படாமல் அதுவும் வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள இந்தக் காலக்கட்டத்தில் இது மிகவும் மோசமான செயல்.பொங்கலுக்கு முன்பாக நாம் அவர்களுக்கு காட்டும் நன்றி இதுதான் எனவும் அரசை விமர்சித்துள்ளார்.
கொரோனா பெருந்தொற்று தீவிரமாக இருந்த நேரத்தில் தங்கள் இன்னுயிரையும் பொருட்படுத்தாமல், முன்களப்பணியாளர்களாக நின்ற தூய்மைப்பணியாளர்கள் சுமார் 700 பேரை சென்னை மாநகராட்சி திடீரென வேலையை விட்டு நீக்கி இருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது என்று தெரிவித்துள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.
read more: திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் ரத்து: ஸ்டாலின் வாக்குறுதி
அதிலும் பொங்கல் பண்டிகை நேரத்தில் இப்படி மாநகராட்சி நிர்வாகம் செய்திருப்பது மனசாட்சியற்ற செயல். உடனடியாக இந்த உத்தரவை திரும்பப் பெற்று, பாதிக்கப்பட்டுள்ள தூய்மைப்பணியாளர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்கிட வேண்டுமென சென்னை மாநகராட்சிக்கு வலியுறுத்தியுள்ளார்.