முதல்வர் வேட்பாளர் குறித்து பா.ஜ.க கூறும் கருத்தை நாங்கள் கணக்கில் எடுக்கப்போவதில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கோவில்பட்டி அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
திரையரங்குகள் திறப்பு
நீண்ட நாட்களுக்கு பின்னர் நாளை திரையரங்குகள் திறக்கப்பட உள்ளன. காலஅவகாசம் குறைவாக இருப்பதால் திரைப்படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

திரையரங்கு உரிமையாளர்களும், திரைப்பட தயாரிப்பாளர்களும் ஏற்கனவே பேசுவதாக தெரிவித்துள்ளனர். இதில், சுமூகமாக முடிவு ஏற்பட்டால் மிகவும் மகிழ்ச்சி.இல்லையென்றாலும், நாளை திரையரங்குகள் திறந்த பின்னர் நான் சென்னை சென்றவுடன் முதல்வரின் அனுமதி பெற்று, இரு தரப்பு அழைத்து பேசி சமரசம் தீர்வு காண அரசு ஏற்பாடு செய்யும்.
முதல்வர் வேட்பாளர்
யார் முதல்வர் என்பதை தீர்மானிப்பது மக்கள் தான். தேர்தலில் அதிகமான சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், நாங்களே எங்களது முதல்வரை தேர்ந்தெடுத்துக்கொள்வோம்.

பா.ஜ.க.வை கணக்கில் கொள்ளவில்லை
ஏற்கனவே எங்களது முதல்வரை அறிவித்துவிட்டோம். அதில் எந்த மாறுபட்ட கருத்தும் இல்லை. நாங்கள் கைகாட்டியவர் தான் முதல்வர் என பா.ஜ.க. தலைவர் அவரது ஆசையை கூறியுள்ளார். அப்படி கூறினால் தான் பா.ஜ.க.வுக்கு அவர்களது கட்சியினர் வேலை பார்ப்பார்கள். சுறுசுறுப்பாக இருப்பார்கள். இது தேர்தல் நேரத்தில் அனைவரும் கூறுவது தான். இதனை நாங்கள் கணக்காக எடுத்துக்கொள்ளப்போவதில்லை. இன்றைக்கு உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் வேட்பாளர் என்ற அறிவிப்போடு தேர்தலை சந்திக்க உள்ளோம். மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.




