ஆளுநரிடம் திமுக அளித்துள்ள ஊழல் புகார்கள் பொய்யானவை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, திமுக தலைவர் ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்தித்தார். சுமார் 1 மணி நேரம் வரை நடந்த இச்சந்திப்பில் முதல்வர் பழனிசாமி மற்றும் அதிமுக அமைச்சர்கள் செய்துள்ள ஊழல்கள் குறித்து 97 பக்க புகார் மனு வழங்கினார் ஸ்டாலின்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், காமராஜ், சி.விஜயபாஸ்கர், உதயகுமார் ஆகியோருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்களை விரிவாக பதிவிட்டதோடு, 2018 ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுத்து- மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தினார் ஸ்டாலின்.
மேலும், அதிமுக அமைச்சர்கள் மீது ஊழல் புகார்கள் வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் சில ஆதாரங்கள் கிடைக்க வேண்டியுள்ளது. அதன்பின்னர் இரண்டாம் பாகத்தை ஆளுநரிடம் கொடுப்போம் எனவும் தெரிவித்தார்.
இந்த சூழலில் தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்குப் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அரசின் மீதான புகார்களை அனைத்தையும் மறுத்தார். கொரோனா மற்றும் புயல்களால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ள இக்கட்டான சூழலில், தைப் பொங்கலை சிறப்பாக கொண்டாட வேண்டும் என அரசு 2,500 ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசை வழங்கிதாக விளக்கினார். இதற்கு பொதுமக்களிடம் கிடைத்த வரவேற்பைப் பொறுக்காமல் ஸ்டாலின், அதிமுக அரசு மீது குற்றம்சாட்டுவதாகவும் சாடினார்.
read more: தமிழகத்திற்கு எப்போது தேர்தல்: ஆணையத்தின் செயலாளர் தகவல்!
திமுக ஆட்சியில் வேண்டுமானால் டெண்டர் விடப்பட்டதில் தவறு நடந்திருக்கலாம். ஆனால், அதிமுக ஆட்சியில் அப்படி நடைபெறுவதற்கு வாய்ப்பே இல்லை என்ற எடப்பாடி பழனிசாமி, “
நான் முதல்வரானது முதல் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார். திமுகவின் முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என்.நேரு, பொன்முடி, சுரேஷ்ராஜன், அனிதா ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், ராமச்சந்திரன், தமிழரசி உள்ளிட்ட அமைச்சர்கள் மீது சொத்துக் குவிப்பு வழக்குகள் உள்ளன. ஆகவே, தங்களது தவறை மறைக்க இவ்வாறு ஊழல் குற்றசாட்டுக்களை அளிக்கிறார்” என்றார். திமுகவின் ஊழல் பட்டியல் தயாராக உள்ளது. சந்தர்ப்பம் வரும்போது அதனை காட்டுவோம் என்றும் அவர் கூறினார்.