தைப்பூச திருவிழா அன்று பொது விடுமுறை அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழ்க் கடவுளாகிய முருகனைச் சிறப்பித்து தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மிக முக்கியமானது தைப்பூசத் திருவிழா. இவ்விழா தமிழ்நாட்டில் மட்டுமின்றி, கேரள மாநிலத்திலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, மொரீஷியஸ் மற்றும் இந்தோனேஷியா போன்ற நாடுகளிலும் தைப்பூசத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
தைப்பூச தினத்தில் பொது விடுமுறை விடப்பட வேண்டும் என்பது முருக பக்தர்களின் நெடுங்கால கோரிக்கைகளில் ஒன்றாக இருந்து வந்தது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தைப்பூசத்திற்கு விடுமுறை அளிக்க வேண்டுமென முதல்வரை நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்த நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு நான் சுற்றுப்பயணம் சென்றபோது, இலங்கை மற்றும் மொரீஷியஸ் நாடுகளில் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிப்பது போன்று தமிழ்நாட்டிலும் தைப்பூசத் திருவிழாவுக்கு பொது விடுமுறை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
read more: பொங்கல் பரிசு டாஸ்மாக் மூலம் அரசுக்கு வந்துவிடும்: மீண்டும் சர்ச்சையில் திண்டுக்கல் சீனிவாசன்
இக்கோரிக்கையை பரிசீலித்து, வரும் ஜனவரி 28-ம் நாள் அன்று கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழாவை, பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன் என அறிவித்துள்ளார். இதற்கு பாஜக, நாம் தமிழர் கட்சிகள் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளன.