சென்னையில் பொங்கல் திருநாளை காவல் துறையினருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொண்டாடினார்.

தமிழரின் தனித் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. வீட்டு வாசலில் தோரணம் கட்டி, வண்ண வண்ண கோலமிட்டு உற்சாகமாகப் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
சென்னையில் காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் பொங்கல் விழாவை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். பரங்கிமலையில் உள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடந்து வரும் பொங்கல் விழாவில் முதல்வர் பழனிசாமி பங்கேற்றார். காவலர்களின் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட முதல்வர், கயிறு இழுக்கும் போட்டியையும், பாரம்பரியமிக்க நடன நிகழ்ச்சியையும் தொடக்கி வைத்தார்.
பின்னர் உரையாற்றிய முதல்வர், வெற்றிநடை போடும் தமிழகத்திற்கு அச்சாணியாக இருப்பது வீரநடை போடும் தமிழ்நாடு காவல் துறை என்றால் அது மிகையல்ல. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்வதற்கு காவல் துறையின் பங்களிப்பு அளப்பறியது என்று பாராட்டினார்.
இன்றைய சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள காவல் துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. காவல் ஆளிநர்களின் மிகைநேரப் பணிகளுக்கான மதிப்பூதியம் 200 ரூபாயிலிருந்து 500 ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டுள்ளதாகத் தெரிவித்த முதல்வர், காவல் துறையிலுள்ள காலிப் பணியிடங்கள் வெகுவாக நிரப்பப்பட்டு, காவல் துறை மேலும் சிறப்பாக செயல்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் அமைதிக்கு துணை நிற்கும் காவல் துறைக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழக அரசு என்றென்றும் துணை நிற்கும் என்று கூறினார்.
read more: சீமானை சீண்டுகிறதா துக்ளக் தர்பார்: விளக்கமளித்த பார்த்திபன்
மேலும், “தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். நமக்கெல்லாம் அந்தத் தை பிறந்திருக்கின்றது, நமக்கெல்லாம் வழி பிறக்கும். இன்றைக்கு தமிழகம் அமைதிப் பூங்காவாக இருப்பதற்குக் காரணம் நம் காவலர்களுடைய திறம்படப் பணி, அர்ப்பணிப்பு உணர்வு. தமிழகம் இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக விளங்குவதற்கு அடித்தளமாக விளங்குபவர்கள் காவலர்கள். அப்படிப்பட்ட காவலர்களோடு, இன்றைக்கு இந்த தைப் பொங்கல் திருநாளை கொண்டாடுவதில் நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன்” என்றும் கூறி உரையை நிறைவு செய்தார்.




