முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பாதுகாப்புக்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் படி உத்தரவிட்டுள்ளார்.
மக்களின் நலனுக்காக பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சற்று முன் பொதுமக்களுக்காக எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது என்பதற்காக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், டிஜிபி ஆகியோர் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் ஆலோசனை நடத்தினர்.
முதலமைச்சர் வெளியே செல்கிறார் என்றால் இணையத்தை துண்டிக்கும் வகையிலும், புல்லட் புரூப் வசதியுடனும் 12 முதல் 13 கார்கள் முதல்வரின் காருக்கு முன்னும், பின்னும் செல்வது வழக்கம். இந்நிலையில் இந்த ஆலோசனை கூட்டத்தில் பொதுமக்களின் வாகனங்களை நிறுத்தாமல் முதல்வரின் வாகனம் மற்ற வாகனங்களுடன் சேர்ந்தே செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டுமென அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
இனி முதல்வரின் பாதுகாப்பிற்காக செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 6 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் தனது பயணத்திற்காக பொதுமக்களுக்கு இடையூறு தரும் விதமாக போக்குவரத்தைக் கட்டுப்படுத்தக்கூடாது எனவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.