நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு காலம் கடத்தாமல் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

நிவர் புயல்
‘நிவர்’ புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களைச் சந்தித்துப் பேசி வருவதிலிருந்து, அ.தி.மு.க. அரசு எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததைக் காண முடிந்தது. தெருக்களிலும், வீடுகளிலும் புகுந்த வெள்ளம் இன்னும் பல இடங்களில் வடியவில்லை. தாம்பரம், முடிச்சூர் போன்ற பகுதிகளில் புகுந்த வெள்ள நீர் வெளியேற்றப்படவில்லை. முதல்வரும், அமைச்சர்களும் இன்னும் தேங்கி நிற்கும் தண்ணீர் பற்றிக் கவலைப்படாமல், பேட்டியளித்துக் கொண்டிருப்பது மட்டுமே, நிவர் சாதனை என செயல்படுவது வேதனையளிக்கிறது.

ஒரு லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர்கள் நாசமடைந்துவிட்டன என்றாலும், பயிர்க் காப்பீடு செய்யாதவர்களுக்கு மாநிலப் பேரிடர் நிதியிலிருந்து நிவாரணம் அளிக்கப்படும் என்கிறார் முதல்வர்.
மழைநீர் அகற்ற வேண்டும்
அதையாவது முழுமையாக – பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் – வாழை விவசாயிகளுக்கும் அதிமுக அரசு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுமா? சென்னை மாநகரில், புறநகரில் தேங்கிக் கிடக்கும் மழைநீரை வெளியேற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடனடி இழப்பீடு
காலம் கடத்தாமல் உடனடியாக வேளாண் விளைபொருட்கள் சேதம், வீடுகள் இழப்பு, உடைமைகள் இழப்பு ஆகியவற்றிற்கான இழப்பீட்டுத் தொகையையும், உயிரிழந்த மூன்று பேரின் குடும்பங்களுக்கும் சிறப்பு நிதியையும் அளித்திட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.




