ஸ்டாலினை சந்திக்கும் காங்கிரஸ் பொறுப்பாளர் குண்டுராவ் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால், கூட்டணி தொடர்பாகவும் அரசியல் கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகின்றன என்பதற்கான விவாதங்களும் தற்போதே துவங்கிவிட்டது. பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக அறிவித்த நிலையில் 50 சீட் வரை பாஜக கேட்பதாக தகவல்கள் வெளிவந்தன.
மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸ், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், திமுக கூட்டணியில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து கண்டறிவதற்கான நடவடிக்கைகளை துவங்கியுள்ளதாக சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார்.
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழக காங்கிரஸை பாதிக்காது எனத் தெரிவித்த அவர், மக்களவைத் தேர்தலில் பீகாரில் எங்களது கூட்டணி தோல்வியைத் தழுவினாலும் தமிழகத்தில் வெற்றிபெற்றது. தொகுதிப் பங்கீட்டில் தேவையற்ற பேரங்கள் இருக்காது என்றும் கூறியிந்தார்.
இதனிடையே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுடன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று முன் தினம் இணைய வழியில் உரையாடினார். அப்போது, தேர்தல் வெற்றி, திமுகவிடம் எத்தனை தொகுதிகளைக் கேட்பது என்பது பற்றி ஆலோசனை நடந்திருக்கிறது. தமிழகத்தில் காங்கிரஸ் 50 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லை எனினும் வலிமையாகவே இருப்பதாக அப்போது ராகுல் தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை, தமிழ்நாடு காங்கிரஸ் பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் இன்று மாலை சந்தித்துப் பேசுகிறார். அப்போது, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே.ஆர்.ராமசாமி உடன் இருக்கிறார்கள். சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை இறுதி செய்வது, தொகுதிப் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.