அவனியாபுரம் ஜல்லிக்கட்டை ராகுல் காந்தி, உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் ஒரே மேடையில் அமர்ந்து பார்வையிட்டனர்.
ஜனவரி மாத இறுதியில் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட பிரச்சாரத்தை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி துவக்க இருக்கிறார். திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் அவரது முதற்கட்ட சுற்றுப் பயணம் நடைபெறுகிறது. இதனிடையே தமிழர்களுடன் பொங்கலை கொண்டாட முடிவெடுத்தார் ராகுல் காந்தி.
இது பொங்கலை கொண்டாடும் நோக்கத்திலான பயணம், தேர்தல் நோக்கம் எதுவும் இதில் இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்தார். இந்த நிலையில் பொங்கல் தினத்தை முன்னிட்டு ராகுல் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், அனைவருக்கும் எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். உங்களுடன் தைப் பொங்கல் கொண்டாட இன்று தமிழகம் வருகிறேன். மதுரையில் ஜல்லிக்கட்டு விழாவில் பங்கேற்கிறேன் என தமிழில் பதிவிட்டார்.
இந்த நிலையில் டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் இன்று நண்பகல் மதுரை விமான நிலையத்திற்கு வந்தார். ராகுல் காந்தி வெள்ளை நிற குர்தா, பேண்ட் அணிவதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆனால் இன்று நில நிற டி-ஷர்ட்டும், அதே நிறத்திலான ஜீன்ஸ் பேண்டும் அணிந்து அசத்தல் லுக்கில் வந்தார். வெளியே திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான தொண்டர்களுக்கு கையசைத்து தன்னுடைய பொங்கல் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
read more: அதானி துறைமுக விரிவாக்கத்திற்கு உதவும் அதிமுக, பாஜக: ஸ்டாலின், வைகோ எதிர்ப்பு!
விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக அவனியாபுரம் புறப்பட்டுச் சென்றார் ராகுல். அங்கு மேடையில் அவரை திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், வணக்கம் தெரிவித்து வரவேற்றார். அப்போது, புதுவை முதல்வர் நாராயணசாமி, கே.எஸ்.அழகிரி உள்ளிட்டோர் உடனிருந்தனர், அதன்பிறகு இருவரும் அருகருகே அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை கண்டுகளிக்கத் துவங்கினர்.