டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்திலும் இடதுசாரி கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடவுள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்கள், மின் திருத்தச் சட்ட முன்வடிவு ஆகியவற்றை நிபந்தனையின்றி ரத்து செய்யக் கோரி விவசாயிகளின் நாடு தழுவிய போராட்டம் நடைபெற்று வருகிறது. பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு ஐந்தாவது நாளாக போராடி வருகின்றனர். டெல்லி போராட்டத்துக்கு நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.
மத்திய பாஜக அரசு கரோனா தொற்றுப் பரவல் காலத்தைப் பயன்படுத்தி அவசரக் கோலத்தில் ஜனநாயக விரோதமாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்காமல், நாடாளுமன்றத்தில் முறையாக விவாதிக்கப்படாமல் இந்த சட்டத்தை கொண்டுவந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. குறைந்தபட்ச ஆதரவு விலை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை, கார்பரேட்டுக்கள் கைகளில் விவசாயத்தை சிக்கவைக்கும் முயற்சி என விவசாய சங்கங்கள் விமர்சிக்கின்றன.
இந்த நிலையில் தமிழகத்தின் இடதுசாரிக் கட்சிகளான சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்எல்) ஆகியவை இன்று கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டன.
போராடும் விவசாயிகளின் கோரிக்கைகளுக்குச் செவிமடுத்துத் தீர்வு காண்பதற்கு மாறாக, மோடி அரசு விவசாயிகள் மீது கொடூரமான அடக்குமுறை நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. டெல்லி நகரத்திற்குள் நுழையவிடாமல் பாஜக அரசின் காவல்துறையும், துணை ராணுவப்படையும் தொடுக்கும் தாக்குதல்களையும், தடைகளையும் எதிர்கொண்டு விவசாயிகள் டெல்லியைச் சுற்றி முகாமிட்டுப் போராடி வருகின்றனர் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடி அரசு நிறைவேற்றியுள்ள இச்சட்டங்களை, விவசாயம் மாநிலப் பட்டியலில் உள்ள ஒன்று என்பதைப் பற்றிக்கூடக் கிஞ்சித்தும் கவலைப்படாமல், அதிமுக அரசு நாடாளுமன்றத்தில் பகிரங்கமாக ஆதரித்துள்ளது மட்டுமின்றி, உடனடியாக தமிழகச் சட்டப்பேரவையிலும் நிறைவேற்றி தமிழக மக்களுக்கும், விவசாயிகளுக்கும் மாபெரும் துரோகத்தினை இழைத்துள்ளது என்று இடதுசாரிகள் குற்றம்சாட்டியுள்ளன.
இந்நிலையில் விவசாயிகளின் பேரெழுச்சி மிக்க போராட்டத்திற்கு ஆதரவையும், ஒருமைப்பாட்டையும் தெரிவிக்கும் வகையிலும், போராடும் விவசாயிகளை அழைத்துப் பேசி அவர்களது கோரிக்கைகளை ஏற்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழகத்தில் மாவட்ட, வட்ட, ஒன்றியத் தலைநகரங்களில் 2020 டிசம்பர் 4ஆம் தேதி முதல் மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு முன்பு தொடர்ச்சியான மறியல் போராட்டம் நடத்துவது என சிபிஐ (எம்), சிபிஐ, சிபிஐ (எம்-எல்) லிபரேசன் ஆகிய இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்துள்ளன என்ற தகவலை தெரிவித்துள்ளன.
இந்த கூட்டறிக்கையில் சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், சிபிஐ (எம்.எல்) என்.கே.நடராஜன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.