ஆட்சியில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டுமென துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ததை அடுத்து முதல்வராக பொறுப்பேற்க இருந்தார் சசிகலா. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை செல்ல நேர்ந்ததால் எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கினார். ஆனால், சில காலங்களிலேயே சசிகலா தரப்பை ஒதுக்கினார் முதல்வர்.
4 வருட சிறை தண்டனை நிறைவடையவுள்ளதால் ஜனவரி 27ஆம் தேதிக்குள் சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகவுள்ளார். இந்த நிலையில் ஆட்சியில் பெண்களுக்கும் சமபங்கு வேண்டும் என துணை முதல்வர் பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பதற்கான கருத்தரங்கு நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. அப்போது பேசிய துணை முதல்வர் பன்னீர்செல்வம், ஒரு ஆட்சியின் 5 ஆண்டு பதவிக்காலத்தில் முதல் இரண்டரை ஆண்டுகள் ஆணுக்கும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் பெண்களுக்கும் வழங்கினால்தான் ஆணுக்கு பெண் சமம் என்ற நிலை அனைத்து மட்டங்களிலும் உருவாகும். பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து நிற்க அரசு அதிகாரிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார்.
முதல்வர் வேட்பாளர் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் இடையே பிரச்சினை முடிவுக்கு வந்துவிட்டது.எனினும், சசிகலாவை மனதில் வைத்து இந்த கருத்தை அவர் சொன்னாரா என்ற விவாதங்களும் இப்போது எழுந்துள்ளது.