மெரினா கடற்கரையில் ஸ்மார்ட் வண்டிகள் அமைப்பதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுவதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஸ்மார்ட் வண்டிகள்
சென்னை மாநகராட்சியினால் ஒப்பந்தப் புள்ளி மூலம் மெரினா கடற்கரைக்கு 900 ஸ்மார்ட் வண்டிகளை வாங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி ஸ்மார்ட் வண்டிகள் ஒதுக்கீடு செய்யப்படும்.
மொத்த 900 வண்டிகளில் 60 சதவீதம் மெரினா கடற்கரையில் தற்போதுள்ள தெரு விற்பனையாளர்களாக இருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு ஒதுக்கப்படும்.
விண்ணப்பங்கள் விநியோகம்
விண்ணப்பிக்க விரும்பும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் 40 சதவீதம் திறந்த நிலையில் வைக்கப்படும். அவர்கள் தற்போது மெரினா கடற்கரையில் தெரு விற்பனையாளர்களாக இருக்கக் கூடாது. ஆனால், அங்கு தங்கள் தொழிலைத் தொடங்க விரும்புகிறவர்களாக இருக்க வேண்டும். இது தற்போதுள்ள தெரு விற்பனையாளர்களுக்கும் புதிய ஆர்வலர்களுக்கும் இடையே நியாயமான சமநிலையை வழங்கும்.
இதற்காக, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள், விற்பனைக் கட்டணம், விற்பனை நேரம், மாத வாடகைத் தொகை, பராமரிப்புக் கட்டணம், அபராதத் தொகை போன்ற விவரங்களைக் கொண்ட இரண்டு வகையான விண்ணப்பங்கள் வருவாய் அலுவலரின் அலுவலகத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை சென்னை-600003ல் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்
விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து பெருநகர சென்னை மாநகராட்சி, வருவாய் அலுவலர் அலுவலகம் தலைமையிடத்தில் வைக்கப்பட்டுள்ள பிரத்யேகப் பெட்டியில் மேற்கண்ட அட்டவணையில் குறிப்பிட்டுள்ள தேதியில் நேரடியாக விண்ணப்பங்களைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் என ஆணையர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.