தேமுதிக இடம்பெறும் கூட்டணியே ஆட்சியமைக்கும் என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் பாமக, பாஜக, தேமுதிக, தமாகா உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்தன. தற்போதும் இந்தக் கூட்டணி தொடர்வதாக இக்கட்சிகளின் தலைவர்கள் அறிவித்தார்கள். ஆனால், அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை, கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், இதில் பாஜகவுடன் மட்டும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை அதிமுக உறுதி செய்துள்ளது.
தற்போது வரை அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என்று தேமுதிக தொடர்ந்து கூறிவந்தாலும், ஜனவரிக்குப் பிறகே சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அறிவிப்பதாக அடுத்த நிமிடமே ட்விஸ்ட் வைத்து விடுகிறது. விஜயகாந்த் சட்டமன்றத் தேர்தல் கிளைமாக்ஸின் போது பிரச்சாரம் மேற்கொள்வார் என்று பிரேமலதா தெரிவித்தார்.
இதனிடையே மூன்றாவது அணியை அமைக்கத் தயார் என்றும், 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடத் தயார் எனவும் விஜய பிரபாகரன் கூறியது விவாதங்களை உண்டாக்கியது. இந்த நிலையில்தான் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்தால்தான் ஆட்சியே அமைக்க முடியும் என பிரேமலதா பேசியுள்ளார்.
read more: மன்னிப்பெல்லாம் கேட்க முடியாது: உதயநிதி ஸ்டாலின்
முதன்முறையாக அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தபோது அதிமுக வென்றது. அதேபோல பாஜகவும் தேமுதிகவுடன் கூட்டணி வைத்ததால் இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. எதிர்வரும் தேர்தலிலும் தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிதான் ஆட்சியமைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.