தே.மு.தி.க. நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.
மதுரையி்ல் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
அரசியல் களம்
தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது. அவருக்கு கொரோனா தொற்று சரியாகிவிட்டது. நன்றாக உள்ளார். அவரை குணப்படுத்திய மருத்துவர், செவிலியர்களுக்கு நன்றி. சட்டப்பேரவைத் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டோம். செயற்குழு பொதுக்குழுவைக் கூட்டி பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.
தே.மு.தி.க. தனித்து நிற்க எந்த அச்சமும் இல்லை. தனித்து நின்று தேர்தலை சந்தித்துள்ளோம். தேர்தலில் காலத்திற்கு ஏற்ப வியூகங்கள் மாறும். கட்சிக்கு எது பலமோ அதன்படி செயல்படுவோம். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை எதிரியும் இல்லை. கண்டிப்பாக அரசியல் களம் மாறும்.
மூன்றாவது அணி
தி.மு.க., அ.தி.மு.க.வுக்கு மாற்று தே.மு.தி.க. மட்டுமே. அதை நிரூபித்தும் காட்டியுள்ளோம். தே.மு.தி.க. தவிர்த்து மூன்றாவது அணி என எந்தக்கட்சியும் சொல்ல முடியாது. தே.மு.தி.க. நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும். அந்த நம்பிக்கை உள்ளது. மூன்றாவது அணி அமைய வாய்ப்புள்ளது. வரும் தேர்தலில் பெரியவர், சிறியவர் என்ற பேச்சுக்கே இடமில்லை.
எல்லா தொகுதிகளிலும் தந்தை பிரச்சாரம் செய்வார். கருணாநிதி, ஜெயலலிதா இல்லாததால் இது தமிழகத்திற்கு முதல் தேர்தல் போல. அரசுப்பள்ளி மாணவர்கள் இட ஒதுக்கீடு விவகாரத்தில் கட்சி சார்பில் அறிக்கை வெளியாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.