முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் புகார்கள் மீது ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென திமுக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பிரச்சாரத்தை திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தற்போதே ஆரம்பித்து நடத்திவருகின்றன. திமுக சார்பில் வரும் பிப்ரவரி மாதம் மாநில மாநாடும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்திலுள்ள கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்றது. ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக முக்கியமாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அதில், மக்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சட்டமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்று, திமுக தலைவர் ஸ்டாலினை முதல்வராக்கிட மாவட்டச் செயலாளர்களின் கூட்டம் உறுதி ஏற்றது. தொடர்ந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது ஆளுநர் விரைந் து நடவடிக்கை எடுக்கவேண்டும், பொள்ளாச்சி பாலியல் வழக்கில் முக்கியக் குற்றவாளிகளை மேலும் தாமதமின்றிக் கைது செய்ய வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
read more: பிப்ரவரி 2: தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் ஆரம்பம்!
மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய பாஜக அரசு நிபந்தனை இன்றி உடனே திரும்பப் பெற வேண்டும் எனவும், மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க வேண்டும் எனவும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் உடனே விடுதலை செய்ய வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.




