வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டுமென முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தினார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மத்திய அரசு அவர்களுடன் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இந்த வேளாண் சட்டங்களை ரத்துசெய்ய வேண்டுமென பஞ்சாப், கேரள சட்டமன்றங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், குறைந்தபட்ச ஆதார விலை இல்லாத, கார்ப்பரேட்டுகளுக்கு, தங்களை நிரந்தர அடிமைகளாக்கும் இந்த மூன்று சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பது டெல்லியில் போராடும் விவசாயிகளின் முக்கியமானதும், முதலாவதுமான கோரிக்கையாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.
முதன்முதலில் விவசாயிகளுக்குக் கடன் தள்ளுபடி செய்து, இலவச மின்சாரம் அளித்த மாநிலம் என்ற முறையில், விவசாயிகளுக்கு மிகவும் நெருக்கடியான இந்த நேரத்தில் தமிழகம், எவ்வித வேறுபாடும் இன்றி ஒன்றிணைந்து, அவர்கள் பக்கம் நின்று, அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வலியுறுத்துவது காலத்தின் கட்டாயம்.
தங்களின் உணர்வுகளைத் தமிழ்நாடு சட்டமன்றம் எதிரொலித்து, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்குத் தோளோடு தோள் நின்று துணைபுரிய வேண்டும் என்பது, நம் மாநிலத்தில் உள்ள அனைத்து விவசாயிகளின் ஆழ்ந்த விருப்பமாக இருக்கிறது. வரவேற்க வேண்டிய அந்த விருப்பத்தைப் பிரதிபலிக்க வேண்டும் என்பதில், பிரதான எதிர்க்கட்சியான திமுக உறுதியாக இருக்கிறது என்றார் ஸ்டாலின்.
read more:
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். அதற்காக தமிழக சட்டமன்றத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.




