திடீர் உடல் சோர்வு காரணமாக திமுக தலைவர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் திமுக சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வந்தது. அந்த வகையில் கொளத்தூரில் திமுக சார்பில் இன்று நடந்த நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு மக்களுக்கு போர்வை, அரிசி உள்ளிட்ட பொருட்களை ஸ்டாலின் வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது ஸ்டாலினுக்கு திடீரென உடல் சோர்வு ஏற்படவே சற்று தள்ளி சென்று நின்றுகொண்டார். தகவலறிந்து பின்பிறத்தில் இருந்து வந்த எம்.எல்.ஏ சேகர்பாபு, உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு போனில் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கொளத்தூரிலுள்ள ஆர்த்தோ அன்ட் நியூரோ மருத்துவமனையில் ஸ்டாலின் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் அங்கு நடந்துள்ளது.
ரத்த அழுத்தத்தின் அளவு குறைந்த காரணத்தால்தான் ஸ்டாலினுக்கு உடல்சோர்வு ஏற்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. மருத்துவமனையில் பரிசோதனை முடிந்த பிறகு ஸ்டாலின் தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.
வருடத்திற்கு ஒருமுறை லண்டன் செல்லும் ஸ்டாலின் அங்குள்ள மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது வழக்கம். கொரோனாவின் காரணமாக இந்த வருடம் லண்டனுக்கு போகவில்லை.
எனினும், கொரோனாவுக்குப் பிறகு நேரம் அதிகமாக கிடைப்பதால் வாக்கிங், சைக்கிளிங், எஸ்சசைஸ் என உடல்நலனில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்டாலின். இசிஆர் சாலையில் ஸ்டாலின் சைக்கிளிங் செல்லும்போது எடுக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதனால் அவரது உடல்நலத்தின் எந்த பிரச்சினையும் இருக்காது என்றும் திமுகவினர் நம்பிக்கைத் தெரிவிக்கிறார்கள்.




