பொள்ளாச்சி வன்கொடுமை விவகாரத்தில் ஆளுங்கட்சி பிரமுகர்கள் சிலரும் சிக்குவார்கள் என ஸ்டாலின் கூறியுள்ளார்.
பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களிடம் நட்பாக பழகி அவர்களை நயவஞ்சகமாக பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஒரு கும்பல் ஈடுபட்டு அதனை வீடியோவாக பதிவு செய்த கொடூர சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இதுதொடர்பாக பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் உள்பட 3 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இதனையடுத்து, அருளானந்தம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமனுடன் அருளானந்தம் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இதுபற்றி அறிக்கை வெளியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின், பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத மாநிலமாகத் தமிழகத்தைச் சீரழித்துள்ளது முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு. அதன் உச்சக்கட்ட வெளிப்பாடுதான், பொள்ளாச்சியில் இளம்பெண்களுக்குத் தொடர்ச்சியாக நடந்த பாலியல் கொடூரங்கள் என்றார்.
அண்ணா அடிக்காதீங்கண்ணா என்று கதறிய அந்தக் குரல் இன்னமும் நம் காதுகளில் ஒலித்து, இதயத்தைக் கிழிக்கிறது என்ற ஸ்டாலின், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களின் குடும்பத்தினருடன் தொடர்புடைய, ஆளுங்கட்சியில் பொறுப்பில் உள்ள பார் நாகராஜன் போன்ற அ.தி.மு.க நிர்வாகிகளுக்கு, இந்தக் கொடூர பாலியல் விவகாரத்தில் தொடர்பிருப்பது அம்பலமானது என சுட்டிக்காட்டினார்.
கைது செய்யப்பட்ட பார் நாகராஜனைக் காப்பாற்ற அமைச்சர் தொடங்கி காவல்துறை வரை காட்டிய அக்கறையும், அரசுத் தரப்பில் எவ்வித எதிர்ப்புமின்றி எளிதாக ஜாமீன் கிடைக்கச் செய்ததும், வெளியே வந்த பார் நாகராஜனை உடனடியாக மாவட்ட ஆட்சியர் சந்தித்ததும், அவரது அலுவலக வளாகத்திலேயே நின்று ஆளுங்கட்சி நிர்வாகியான நாகராஜன் பேட்டி அளித்ததும், எடப்பாடியின் ஆட்சியில் பெண்களின் பாதுகாப்பு எந்த லட்சணத்தில் இருக்கிறது என்பதையே அப்பட்டமாகக் காட்டியது என்றவர்,
சிக்க வேண்டிய ஆளுங்கட்சி பிரமுகர்கள் இன்னும் பலர் உள்ள நிலையில், தற்போது பிடிபட்டவர்களுக்கு, பார் நாகராஜன் போல உடனடி ஜாமீன் கிடைப்பதற்கு வழி வகுத்துவிடக்கூடாது. பொல்லாத அ.தி.மு.க ஆட்சியில் நடந்த பொள்ளாச்சி கொடூரம் என்பது ஆறேழு ஆண்டுகளாகவே இப்பகுதியில் தொடர்ச்சியாக நடந்து வரும் நிலையில், அதில் ஆளுங்கட்சியினரின் குடும்பத்து இளைஞர்களும், ஆளுங்கட்சியோடு பல வகையிலும் நெருக்கமானவர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர்.
read more: அமைச்சர் காமராஜுக்கு கொரோனா பாதிப்பு!
சி.பி.ஐ. விரைந்து விசாரணை நடத்தி, கொடூர பாலியல் குற்றத்தில், அ.தி.மு.கவின் மேலிடம் வரை தொடர்புடைய அனைவரையும் கைது செய்து, விரைந்து விசாரணை நடத்தி, ஒரு குற்றவாளிகூட தப்பிக்காதபடி தண்டிக்கப்பட்டு, தமிழ்நாட்டுப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.