விவசாய சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய சட்டங்களுக்கு எதிராகவும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. அதில் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டு உரையாற்றி வருகிறார்கள்.
உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்து உரையாற்றிய திமுக தலைவர் ஸ்டாலின், கொரோனா காலத்தைப் பயன்படுத்தி, மத்தியில் இருக்கும் பா.ஜ.க. அரசு மக்கள் விரோதச் சட்டங்களை அவசர அவசரமாகக் கொண்டு வந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. விவசாயிகளின் வாழ்க்கையைச் சிதைக்கும் வகையிலும் அமைந்திருப்பதால் ஒட்டுமொத்த விவசாயிகளும் அதை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.
read more: ரஜினி, கமல் அதிமுகவில் இணையலாம்: நமது அம்மா விமர்சனம்!
சட்டங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு விவசாயிகளை, விவசாயச் சங்கப் பிரதிநிதிகளை அழைத்து அவர்களிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி இருக்க வேண்டும். அல்லது இதுகுறித்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதத்தை நடத்தி ஜனநாயகத்தைப் பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், இது எதையும் இந்த மத்திய அரசு செய்திடவில்லை. எதற்காக இவ்வளவு அவசரம்; யாரைப் பாதுகாக்க இந்தச் சட்டத்தை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள்? என்ற கேள்வியை ஸ்டாலின் முன்வைத்தார்.
மேலும். மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற ஒரே கோரிக்கையை முன்வைத்து விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.ஆனால் மத்திய அரசு அதை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறது என்றவர், வேளாண் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவதால் எவ்விதப் பயனும் இல்லை. ஆகவே அவற்றைத் திரும்பப் பெற வேண்டும். அதுதான் விவசாயிகளுடைய கோரிக்கை; நம்முடைய கோரிக்கை; மக்களுடைய கோரிக்கை என்பதையும் எடுத்துச் சொல்லி, அவற்றைத் திரும்பப் பெறுகிற வரையில் நம்முடைய போராட்டங்கள் தொடரும்; வேறு கட்டங்களில் அவற்றை முடிவு செய்து அறிவித்து நடத்தத் திட்டமிட்டிருக்கிறோம் என்று ஸ்டாலின் அறிவித்தார்.