பொங்கல் பரிசு டோக்கன் குறித்து அதிமுகவுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் திமுக புகார் அளித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை அடுத்து அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 2,500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். ஜனவரி 4ஆம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு அதிமுகவினர் மூலமாக டோக்கன் விநியோக்கிக்கப் படுவதாக திமுக குற்றம்சாட்டியது.
இந்த நிலையில் பொங்கல் பரிசு டோக்கன் தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாஹுவிடம் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையிலான வழக்கறிஞர் குழுவினர் நேரில் புகார் அளித்தனர்.
அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, கொரோனா நேரத்தில் மக்கள் நெருக்கடியாக இருந்தபோது தமிழக அரசு பணம் கொடுக்கவில்லை. ஆனால், தேர்தல் நெருங்குவதால் தேர்தல் பிரச்சாரத்தின்போது பொங்கல் பரிசை அறிவித்துள்ளார் முதல்வர். இது சட்டப்படி நியாயமில்லை. தேர்தல் பிரச்சாரத்தை அதிமுக தொடங்கிவிட்டதால் இதுதொடர்பாக ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என்றார்.
read more: வெற்றிநடை போடும் தமிழகம்: பதிலடி வாசகத்துடன் பிரச்சாரத்தில் குதிக்கும் இபிஎஸ்
ஒவ்வொரு தொகுதியிலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் அவர்களது கட்சி நிதியிலிருந்து அளிப்பது போல டோக்கனை வழங்குகிறார்கள் என்ற ஆர்.எஸ்.பாரதி, அதற்கு ஆதாரமாக சில நோட்டீஸ் புகைப்படங்களையும் காட்டினார். “மக்களின் வரிப்பணத்தில் வழங்கும் பொங்கல் பரிசு டோக்கன்களில் அதிமுக அமைச்சர்களின் பெயர்கள், படங்கள் அச்சடித்து அதிமுகவின் கட்சி நிதியை வழங்குவது போல ஆளுங்கட்சியினர் வினியோகம் செய்வது அதிகார துஷ்பிரயோகம்” என்று குற்றமும் சாட்டினார்.
மனுவின் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்லவும் தயாராக இருக்கிறோம் என்றும் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.