மாகண ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் இலங்கைக்கு இந்தியா எச்சரிக்கை விடுக்க வேண்டுமென டி.ஆர்.பாலு பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அதிபராக கோத்தபய ராஜபக்ஷேவும், பிரதமராக மகிந்த ராஜபக்சேவும் பதவியேற்று ஏறக்குறைய ஓராண்டுகள் ஆகிவிட்டது. பதவியேற்ற புதிதில் ஈழத்தமிழர்கள் வாழும் பகுதி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் ரோந்துப் பணிகளில் ஈடுபடும் அவசர சட்டத்தை கொண்டு வந்தனர். அதன்பிறகு தமிழில் தேசிய கீதம் இசைக்கப்படாது என்ற அறிவிப்பு வெளியானது.
இந்த நிலையில் இப்போது இ லங்கையில் மாகாணங்கள் ஒழிக்கப்படும் என்று அறிவித்துள்ள இலங்கை அரசு, அதற்கான நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறது.
இதுதொடர்பாக திமுகவின் நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கையில், ராஜபக்சே சகோதரர்கள் புதிதாக ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஈழத்தமிழர்களின் உரிமைகளை முற்றாகப் பறிக்கும் விதத்திலும் அவர்களின் சுயமரியாதை மற்றும் கண்ணியத்தைச் சீர்குலைக்கும் விதத்திலும், ஒவ்வொரு நாளும் எடுத்து வரும் நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசும் கண்டுகொள்ளாமல் அமைதி காப்பது மிகுந்த கவலையளிக்கிறது. எனக் குறிப்பிட்டார்.
மாகாணங்களை ஒழிக்கும் திட்டம், இந்திய – இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவான 13-ஆவது சட்டத் திருத்தத்திற்கு எதிரானது. அந்தச் சட்டத் திருத்தத்தையே அகற்றி விடும் ஆணவம் மிக்க, அக்கிரமமான நடவடிக்கை இது என்றவர், இந்தியாவுடன் போட்ட ஒப்பந்தமே மதிக்கப் படாமல், கேள்விக்குறியாக்கப்படுகின்ற இந்த நெருக்கடியான நேரத்தில் கூட, நமது வெளியுறவுத்துறை அமைச்சரோ, சமீபத்தில் இலங்கைச் சென்று வந்த தேசியப் பாதுகாப்பு ஆலோசகரோ – ஏன், நம் பிரதமரோ, வாய் திறக்காமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
read more: ஆர்.எஸ்.எஸ் போல பணியாற்றுங்கள்: பாமகவினருக்கு ராமதாஸ் கட்டளை!
13-ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அதிகமான அதிகாரத்தை தமிழர்களுக்கு அளிப்போம் என்றெல்லாம் பேசி விட்டு, தற்போது தமிழர்களுக்கென இருக்கின்ற மாகாணங்களையும் ஒழிப்போம் என்பதை, இந்திய அரசு எப்படி – ஏன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது? என்ற கேள்வியை முன்வைத்த அவர், “ஈழத் தமிழர்களுக்கு தற்போது இருக்கின்ற குறைந்தபட்ச சுய மரியாதையையும் பறிக்கும் இந்த மாகாண ஒழிப்பு திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் அப்படியொரு முடிவு, இந்திய, இலங்கை உறவில் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இலங்கைக்குக் கடுமையான எச்சரிக்கை விடுக்க வேண்டும்” எனவும் வலியுறுத்தினார்.




