நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்துசெய்யப்பட்டதற்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் நவம்பர் இறுதி அல்லது டிசம்பர் ஆரம்பத்தில் துவங்கும். தற்போது விவசாயிகள் போராட்டம் வலுத்துள்ளதால் அதுகுறித்து விவாதிக்க குளிர்காலக் கூட்டத் தொடரை கூட்ட வேண்டுமென எதிர்கட்சிகள் வலியுறுத்தின.
ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக குளிர்கால கூட்டத் தொடர் ரத்துசெய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்தார். விவசாயிகள் போராட்டத்தின் அச்சம் காரணமாவே கூட்டத் தொடரை நடத்தவில்லை என எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அத்துடன், உடனடியாக குளிர்கால கூட்டத் தொடரை நடத்தவும் வலியுறுத்தியுள்ளன.
இந்த நிலையில் குளிர்கால கூட்டத் தொடர் ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, சீன உறவு மிக மோசமான நிலையில் இருக்கிறது என்று ஒருபுறம் நாட்டின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சொன்னதையும், விவசாயிகள் போராட்டத்தையும் சுட்டிக்காட்டி மிக தலையாய பிரச்சினைகள் இன்றைக்கு அணிவகுத்து நிற்கின்றன என்றார்.
read more: தருமபுரி எம்.பி செந்தில்குமாரை அடிக்கப் பாய்ந்த பாமகவினர்!
இப்பிரச்சினைகள் குறித்தெல்லாம் விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான காலக்கட்டத்தில், நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த மத்திய பாஜக அரசு விரும்பவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது என்று டிஆர்.பாலு கூறினார். நம் நாட்டின் இதயம் ஜனநாயகம்தான். அந்த இதயம் நாடாளுமன்றத்தில் நடைபெறும் அர்த்தமுள்ள விவாதங்களின் மூலம்தான் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதை ஏனோ பிரதமர் நரேந்திர மோடி உணர முன்வரவில்லை என்றவர்,
“இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் குளிர்காலக் கூட்டத்தை ரத்து செய்வது குறித்துக் கலந்து ஆலோசனை கூட நடத்தாமல், எதேச்சதிகாரமாக முடிவு எடுத்துள்ளது ஏற்றுக்கொள்ள இயலாத நடைமுறை.
விவாதங்கள் ஏதுமின்றி, மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிந்துகொள்ள மனமின்றி, அவசரச் சட்டங்களை நிறைவேற்றுவதே மார்க்கம் என்று ஒரு ஆட்சியை நடத்தலாம் என்று மத்திய பாஜக அரசு இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. எதிர்க்கட்சிகளைப் புறக்கணித்து பெரியண்ணன் பாணியில் இதுபோன்று செயல்படும் போக்கை மத்திய பாஜக அரசு உடனடியாக கைவிட்டு, கருத்தொற்றுமை, ஜனநாயகம் என்ற உன்னதமான பாதைக்குத் திரும்ப வேண்டும் எனவும் டி.ஆர்.பாலு மத்திய அரசுக்கு வலியுறுத்தினார்.